;
Athirady Tamil News

இஸ்ரேல் மீது ஈரானின் ஏவுகணை மழை… மகனின் திருமணத்தை ஒத்திவைத்த பிரதமர் நெதன்யாகு

0

ஈரானுடனான மோதல் அதிகரித்து வருவதால், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மகனின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருமணக் கொண்டாட்டத்தில்
டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், நெதன்யாகுவின் மகன் அவ்னர் நெதன்யாகு, தனது காதலி அமித் யார்தேனியை திங்கட்கிழமை திருமணம் செய்து கொள்ளவிருந்தார்.

இஸ்ரேலிய பணயக்கைதிகள் இன்னும் காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், நெதன்யாகு குடும்பத்தினர் திருமணக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சில அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டனம் தெரிவித்ததால், திருமணம் சர்ச்சையை ஏற்படுத்திய பின்னர் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நெதன்யாகு குடும்பத்தினர் ஒருபக்கம் பெரும் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஈரானுக்கு எதிராக அணுசக்தி தளங்கள், இராணுவ வசதிகள், ஏவுகணை தளங்கள் மற்றும் ஈரானின் மூத்த தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் ஒரு பெரிய தாக்குதலைத் தொடங்கியது.

பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசியுள்ளது, இது நாடு தழுவிய அவசரநிலையைத் தூண்டியுள்ளது, இஸ்ரேல் முழுவதும் ஏவுகணை அபாய ஒலிகள் ஒலித்தன, மக்களில் பெரும்பாலானவர்கள் பதுங்கு முகாம்களில் முதல் முறையாக தஞ்சமடைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை வெளியான தகவலில், ஈரானிய தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாகவும், 180 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் இதுவரை நடத்திய தாக்குதல்கள், ஈரான் வரும் நாட்களில் காணப்போகும் தாக்குதல்களுடன் ஒப்பிடும்போது ஒன்றுமில்லை என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

சர்ச்சைக்குரிய விடயமாக
ஆனால், ஈரான் இதுவரை பயன்படுத்திய ஏவுகணைகள் அனைத்தும் 20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டவை என்றும், சமீபத்தில் தயாரித்துள்ள ஏவுகணைகளை ஈரான் இதுவரை பயன்படுத்தத் தொடங்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவே அமெரிக்க ஆதரவு இஸ்ரேலை கதற வைத்துள்ளது என்றும் ஈரானிய தரப்பு குறிப்பிட்டுள்ளது.

நெதன்யாகு அரசாங்கம் ஈரானை தாக்குவதற்கு முன்பே, அவ்னர் நெதன்யாகுவின் திருமணம் இஸ்ரேலில் ஏற்கனவே சர்ச்சைக்குரிய விடயமாக இருந்தது. காஸா மீதான போர் ஒருபக்கம், திருமணம் மறுபக்கம் என நெதன்யாகு அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

மட்டுமின்றி, திருமண மண்டபத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்யப்போவதாக பல அரசாங்க எதிர்ப்பு அமைப்புகள் சமீபத்திய வாரங்களில் எச்சரித்திருந்தன.

பாதுகாப்பு கவலைகளுக்கு மத்தியில், இஸ்ரேலிய காவல்துறையினர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து 100 மீற்றர் சுற்றளவில் இரும்பு சாலைத் தடைகளையும் முள்வேலிகளையும் அமைத்தனர்.

இந்த நிலையில், அமெரிக்க ஆதரவு இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் தொடங்கவும், ஈரான் தக்க பதிலடி அளிக்கவும், தற்போது மகனின் திருமணத்தை நெதன்யாகு ஒத்திவைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.