;
Athirady Tamil News

கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 2,765 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல் – தமிழக அரசு தகவல்..!!

0

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குற்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழக அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் ஆகியோர் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பான தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955-ன் படி வழக்குப் பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம் 1980-ன் படி தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, 2022 செப்.26 முதல் 2022 அக்.2 வரையுள்ள ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூபாய் 15,62,367 மதிப்புள்ள 2765 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசியும், அக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட33 வாகனங்களும் கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன. அக்குற்றச் செயலில் ஈடுபட்ட 195 நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், 5 நபர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980-ன்படி கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.