;
Athirady Tamil News

ராக்கெட் ஏவுவதில் சிறந்த நாடாக இந்தியா உள்ளது..!!

0

காரைக்கால்
ராக்கெட் ஏவுவதில் சிறந்த நாடாக இந்தியா உள்ளதாக காரைக்காலில் நடந்த விண்வெளி அறிவியல் கண்காட்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

விண்வெளி அறிவியல் கண்காட்சி
உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு, புதுச்சேரி அரசும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமும் இணைந்து காரைக்கால் அரசு உள் விளையாட்டு அரங்கில் இந்திய விண்வெளி அறிவியல் கண்காட்சி நடத்துகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியின் தொடக்க விழா இன்று நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். விழாவில் இஸ்ரோ விஞ்ஞானி ராஜராஜன், அமைச்சர் சந்திர பிரியங்கா, நாஜிம் எம்.எல்.ஏ., காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் மற்றும் இஸ்ரோவை சேர்ந்த விஞ்ஞானிகள், அரசுத்துறை அதிகாரிகள், பெற்றோர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் சுமார் 1200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:- நமது நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் ஒரு முறை பேசும்போது, இறைவன் நமது முதல் பக்கத்தையும், 2-வது பக்கத்தையும் எழுதி விட்டான். இடையில் உள்ள பக்கங்களை நாம் தான் எழுதப் போகிறோம் என்று மாணவர்களுக்கு வாழ்க்கை முறையை சொல்லிக் கொடுத்தார்.

சிறந்த நாடு இந்தியா
முதல் ராக்கெட் சைக்கிளில் தான் கட்டி எடுத்துச் செல்லப்பட்டது. இன்று உலகம் முழுவதும் வியக்கும் அளவிற்கு ராக்கெட் ஏவுவதில் சிறந்த நாடாக இந்தியா முன்னேறி இருப்பதற்கு இஸ்ரோவுக்கு மிகப்பெரிய பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன். செவ்வாயை அடைய பல நாடுகள் பலமுறை முயற்சி செய்தன. ஆனால் இந்தியா ஒரே முயற்சியில் செவ்வாயை அடைந்து விட்டது. குழந்தைகள், மாணவ-மாணவிகள் கண்காட்சியை ஒருமுறையாவது பார்த்து விட்டு செல்ல வேண்டும். நமது விண்வெளியை பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும். வாய்ப்புகள் வந்தால் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு, விவசாயிகளுக்கு வழிகாட்டுவதற்கு விஞ்ஞானிகள் தயாராக இருக்கிறார்கள். எலும்பு நோய், இதய நோய், மறதிநோய் ஆகியவற்றை குணப்படுத்த ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இது மனித குலத்திற்கு தேவையான ஒரு விஞ்ஞானம். இவ்வாறு அவர் கூறினார்.

வளர்ச்சி திட்டங்கள்
கண்காட்சியில் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 26 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 26 அரங்குகளை அமைத்து 70-க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிக்காக வைத்திருந்தனர். இந்த கண்காட்சி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற உள்ளது. மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம். தொடர்ந்து காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாக கலெக்டர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.