;
Athirady Tamil News

நரபலி கொடுத்த பெண்களை 56 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூர மந்திரவாதி- அதிர்ச்சியூட்டும் தகவல்கள்..!!

0

கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் செல்வம் பெருக 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதன் விபரம் வருமாறு:-
கேரளாவின் எர்ணாகுளத்தை அடுத்த காலடி பகுதியை சேர்ந்தவர் ரோஸ்லின் (வயது 50). லாட்டரி சீட்டு விற்று வந்தார். கடந்த ஜூன் மாதம் லாட்டரி சீட்டு விற்க வெளியே சென்ற அவர் அதன்பின்பு வீடு திரும்பவில்லை. இதுபற்றி உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ரோஸ்லினை தேடி வந்தனர். இதுபோல தமிழகத்தின் தர்மபுரியை சேர்ந்த பத்மா (52) என்ற பெண்ணும் கேரளாவில் தங்கி இருந்து லாட்டரி சீட்டு விற்று வந்தார். அவரும் கடந்த மாதம் திடீரென மாயமானார். இது பற்றி அவரது மகன் எர்ணாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்து பத்மாவை தேடி வந்தனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பத்மாவின் செல்போன் எண்ணை பெற்று கடைசியாக அவர் எந்த பகுதியில் இருந்து பேசினார் என்பதை ஆய்வு செய்தனர். இதில் அவரது செல்போன், பத்தினம்திட்டாவை அடுத்த திருவல்லா பகுதியில் இருந்து பேசப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். இதில் பத்மாவை முகமது ஷபி என்ற நபர் அழைத்து செல்வது பதிவாகி இருந்தது. போலீசார் முகமது ஷபியை கண்டுபிடித்து கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர்தான் பத்மாவை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் பத்மா கொலை செய்யப்பட்டதும், அவரது உடலை திருவல்லாவில் உள்ள பகவந்த் என்ற வைத்தியர் வீட்டின் பின்பகுதியில் புதைத்திருப்பதாகவும் கூறினார். போலீசார் அங்கு சென்று பத்மாவின் உடலை தோண்டி எடுத்தனர். அந்த உடல் அருகே இன்னொரு உடலும் புதைக்கப்பட்டிருந்தது. அந்த உடல் யாருடையது என விசாரித்தபோது அது எர்ணாகுளத்தில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாயமான ரோஸ்லின் உடல் என தெரியவந்தது. ரோஸ்லின், பத்மா இருவரையும் கொலை செய்தது ஏன்? என்பது பற்றி முகமது ஷபி, பகவந்த் இருவரும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். அதில் சித்த வைத்திய தொழில் செய்து வந்த பகவந்த்துக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை.

இதனால் அவர் செல்வம் பெருக என்ன செய்யலாம் என நண்பரும், மந்திரவாதியுமான முகமது ஷபியிடம் ஆலோசனை கேட்டார். அவர் பெண்களை நரபலி கொடுத்தால் வீட்டில் செல்வம் பெருகும் என கூறினார். இதற்கான பெண்ணை தானே ஏற்பாடு செய்வதாகவும் முகமது ஷபி கூறினார். இதையடுத்து முகமது ஷபி, எர்ணாகுளத்தில் இருந்து ரோஸ்லினை திருவல்லா அழைத்து வந்தார். பண ஆசை காட்டியும், சினிமாவில் நடிக்க வைப்பதாகவும் கூறி அழைத்து வந்த அவரை பகவந்த் வீட்டில் வைத்து நரபலி கொடுத்துள்ளனர்.

முதலில் அவரை நிர்வாணமாக படுக்க வைத்து பின்னர் அவரது தலையில் சுத்தியலால் அடித்தும், மார்பகத்தை அறுத்தும் உள்ளனர். அவர் இறந்த பின்பு உடலை 56 துண்டுகளாக வெட்டி வீட்டின் பின்புறம் குழிதோண்டி புதைத்துள்ளனர். அதன்பின்பு தர்மபுரி பத்மாவையும் இதே போல அழைத்து வந்து அவரையும் 5 துண்டுகளாக வெட்டி நரபலி கொடுத்துள்ளனர். இந்த கொலைக்கு பகவந்தின் மனைவி லைலாவும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.

கொலை நடந்த பகுதியில் இன்று போலீசார் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கொலையுண்ட பெண்களின் உடல் பாகங்கள் பாதி தின்ற நிலையில் காணப்பட்டது. இது பற்றி போலீசார் கைதான 3 பேரிடமும் விசாரித்தனர். அப்போது பகவந்த்தின் மனைவி லைலா, நரபலி முடிந்ததும் கொலையுண்ட பெண்களின் உடலை தின்றதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இந்த காலத்திலும் இப்படி மனிதர்கள் இருக்கிறார்களே என்று வருந்தினர்.

இக்கொலை சம்பவம் பற்றி எர்ணாகுளம் போலீஸ் டி.ஐ.ஜி. நிஷாந்தினி கூறியதாவது:-
கேரளாவில் பெண்களை நரபலி கொடுத்ததாக முகமது ஷபி, பகவந்த் அவரது மனைவி லைலா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வீட்டின் பின்புறம் கொலையுண்ட பெண்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளோம். அழுகிய நிலையில் இருந்ததால் உடல்கள் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனையும் நடத்தப்படுகிறது. நரபலி பூஜை என்ற பெயரில் மேலும் பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்களா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இதற்காக அந்த பகுதியில் மாயமான பெண்களின் பட்டியலை எடுத்து விசாரணை நடத்தி வருகிறோம். இதற்கிடையே இந்த வழக்கில் கைதான 3 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அவர்களை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம், என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.