;
Athirady Tamil News

மனித உரிமை மீறல்கள் குறித்த அமெரிக்காவின் அறிக்கை: இந்தியா கடும் கண்டனம்

0

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் “2023 ஆம் ஆண்டின் மனித உரிமைகள்” அறிக்கையில் மணிப்பூர் வன்முறை மற்றும் கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை போன்ற சம்பவங்களில் இந்தியாவை முன்வைத்து மனித உரிமை மீறல்கள் அதிகரித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் நீதிக்கு புறம்பான கொலைகள், பலவந்தமாக காணாமல் போதல், கடுமையான சிறைவாசம், தன்னிச்சையான கைது, நாடுகடந்த அடக்குமுறை ஆகியவை அடங்குகின்றன.

மணிப்பூரில் 175 பேரின் மரணம்
அரசாங்க அதிகாரிகள் அல்லது கொள்கைகளை விமர்சித்ததால் பழிவாங்கல், தவறான தகவல் மூலம் தாக்குதல் மற்றும் சமூக ஊடகங்களை பிரசாரத்திற்கு சுதந்திரமாக பயன்படுத்த இயலாமை உள்ளிட்ட எதிர்கட்சிகளின் உறுப்பினர்களால் புகாரளிக்கப்பட்ட தடைகள் குறித்தும் அமெரிக்க அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பாக மேற்கு வங்கத்தில் ஜூலை 8 அன்று ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக 52 பேர் கொல்லப்பட்ட தேர்தல் வன்முறையையும் அது சுட்டிக்காட்டுகின்றதுடன் மணிப்பூரில், குறைந்தது 175 பேரின் மரணத்திற்கு வழிவகுத்த இன வன்முறையையும் அமெரிக்க அறிக்கை எடுத்துக் கூறியுள்ளது.

வீடுகள், வணிகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை அழித்ததோடு, ஆயுத மோதல், கற்பழிப்பு மற்றும் தாக்குதல்கள் பற்றிய அமெரிக்காவின் புள்ளி விவரங்களை அமெரிக்க வெளியுறவுத்துறை மேற்கோள் காட்டுகிறது.

மேலும் இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடத்திய சோதனைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குஜராத் கலவரம்
2002 குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை குறிப்பிடுகையில், “அரசாங்கம் ஆவணப்படத்தைத் திரையிடுவதைத் தடைசெய்ய அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தியது. காணொளிகளுக்கான இணைப்புகளை அகற்ற ஊடக நிறுவனங்களை கட்டாயப்படுத்தியது. இந்தியாவில் திரையிட தடை விதிக்கப்பட்டது. பொதுவெளியில் அந்த காணொளியைக் காண ஏற்பாடு செய்த மாணவர் அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுத்தது” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால், அமெரிக்காவின் இந்த அறிக்கைக்கு வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

”ஆழ்ந்த பக்கச்சார்பானது மற்றும் இந்தியாவைப் பற்றிய மோசமான புரிதலை இது பிரதிபலிக்கிறது. நாங்கள் அதற்கு எந்த மதிப்பையும் கொடுக்கவில்லை” என்று அமெரிக்க அறிக்கையை பொருட்படுத்தாது இந்தியா புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.