;
Athirady Tamil News

குஜராத் கேபிள் பால விபத்தில் 60 பேர் உயிரிழப்பு-பிரதமர், தமிழக முதலமைச்சர் இரங்கல்..!!

0

குஜராத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க கேபிள் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. இந்த துயர சம்பவம் குறித்து பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சியினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மோர்பியில் நடந்த சோக நிகழ்வு என்னை கவலையடையச் செய்துள்ளது. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட மக்களுடன் உள்ளன. நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்படும் என்று கூறியுள்ளார். குஜராத் மாநிலம் மோர்பியில் நிகழ்ந்த சோகமான சம்பவத்தைப் கேள்விப்பட்டு வேதனையடைந்ததாக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தாம் பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குஜராத் விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி உடனடியாக அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தி உள்ளார். இதற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதேபோல் மோர்பி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு குஜராத் அரசு சார்பில் தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார். குஜராத் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், மோர்பி பாலம் விபத்தில் சிக்கி பல அப்பாவி உயிர்கள் பலியாகியதில் ஆழ்ந்த வேதனையடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் வேண்டுகிறேன். அதே வேளையில், சிக்கியுள்ள எஞ்சிய மக்கள் விரைவில் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அக்கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உள்ளிட்டோரும் மோர்பி கேபிள் பாலம் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.