;
Athirady Tamil News

காதலி உடலை 35 துண்டுகளாக வெட்டிய பிறகு துண்டிக்கப்பட்ட தலையை 20 நாட்கள் தினமும் எடுத்து பார்த்த ‘சைக்கோ’ காதலன்..!!

0

டெல்லியில் காதலியை கொடூரமாக கொலை செய்து காதலன் 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மும்பையின் பால்கர் பகுதியை சேர்ந்தவர் ஷ்ரத்தா (வயது26). கால் சென்டரில் பணியாற்றி வந்த அவருக்கு 2019-ம் ஆண்டில் அப்தாப் அமீன் பூனாவாலா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது. இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். காதலனுக்காக பெற்றோரை உதறி தள்ளிய ஷ்ரத்தா மும்பையின் வாசி பகுதியில் காதலனுடன் தனி வீட்டில் வாழ்ந்தார். மும்பையில் வசித்தால் பெற்றோர், உறவினர்கள் தொந்தரவு செய்வார்கள் என்று கருதிய காதலர்கள் யாருக்கும் தெரியாமல் டெல்லிக்கு இடம் பெயர்ந்தனர்.

அங்கு ஷ்ரத்தா பன்னாட்டு நிறுவனத்தின் கால் சென்டரில் பணியாற்றினார். அப்தாப் நட்சத்திர ஓட்டலில் சமையல்காரராக வேலை செய்தார். மஹாரவுலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் வசித்தனர். திருமணம் செய்யாமல் ‘லிவிங் டுகெதர்’ முறையில் வாழ்ந்தனர். அப்தாபுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பது ஷ்ரத்தாவுக்கு தெரியவந்தது. இதனால் தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் வற்புறுத்தினார். இதனால் அவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டது. நாள்தோறும் அவர்கள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இரவில் ஷ்ரத்தாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். கடந்த மே மாதம் 18-ந்தேதி அவர்களுக்குள் மிகப்பெரிய சண்டை நடந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவன் காதலி ஷ்ரத்தாவை தலையணையால் அமுக்கி கொலை செய்தான். கொலையை மறைக்க உடலை துண்டு துண்டாக வெட்டினான். இறைச்சியை வெட்ட பயன்படுத்தும் கத்திகளால் ஷ்ரத்தாவின் கைகளை 3 துண்டுகளாகவும், கால்களை 3 துண்டுகளாகவும் வெட்டினான். ஒட்டுமொத்தமாக அவரது உடல் பாகங்களை 35 துண்டுகளாக வெட்டினான். அவற்றை தனித்தனி பிளாஸ்டிக் கவரில் சுற்றி பிரிட்ஜில் வைத்துள்ளான். நாள்தோறும் நள்ளிரவில் 2 மணிக்கு வெளியே சென்று ஒவ்வொரு துண்டையும் வீசி எறிந்துள்ளான். தொடர்ச்சியாக 20 நாட்கள் நள்ளிரவு 2 மணிக்கு ஆள் நடமாட்டம் இல்லாத வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று அனைத்து உடல் பாகங்களையும் வீசியுள்ளான்.

அவற்றின் சில துண்டுகளை நாய்கள் கவ்வி சென்றன. ஷ்ரத்தாவின் நண்பர் மூலம் தான் அவர் காணாமல் போனது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அப்தாப்பை பிடித்து விசாரணை நடத்திய போது காதலியை கொன்று உடலை துண்டு துண்டாக வீசியது தெரியவந்தது. போலீசார் அவனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சைக்கோ காதலன் பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. துண்டிக்கப்பட்ட காதலியின் தலையை கடைசியாக வீசியுள்ளான். அவரது நினைவாக 20 நாட்கள் தினமும் தலையை பிரிட்ஜில் இருந்து எடுத்து பார்த்துள்ளான். முடிவில் வேறு வழியில்லாமல் தலையை வீசியதாக அப்தாப் போலீசில் தெரிவித்து உள்ளான்.

காதலி ஷ்ரத்தாவின் உடலை துண்டு துண்டாக வெட்டும் போது அப்தாபுக்கு கையில் கத்தி குத்து காயம் ஏற்பட்டது. இதற்காக அவன் டாக்டர் அணில் குமாரிடம் சென்று சிகிச்சை பெற்றான். பழங்களை வெட்டும் போது காயம் ஏற்பட்டதாக அவன் டாக்டரிடம் பொய் கூறியுள்ளான். இதை நம்பி டாக்டரும் அவனுக்கு சிகிச்சை அளித்துள்ளார். 5 முதல் 6 தையல்கள் வரை அப்தாபுக்கு போடப்பட்டுள்ளது. தற்போது டாக்டர் அணில்குமார் இந்த வழக்கில் சாட்சியாக மாறி உள்ளார். அவர் அப்ரூவர் ஆவதால் இந்த வழக்கில் பிடி இறுகுகிறது. துண்டிக்கப்பட்ட ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் சத்தார்பூர் வன பகுதியில் வீசப்பட்டுள்ளன. அவற்றை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 10 துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தடயவியல் நிபுணர்கள் அதை ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஷ்ரத்தாவின் தலையை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தலையை கண்டு பிடித்தால் தான் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியும். தலை கண்டு பிடிக்கப்பட்டதும் மண்டை ஓடு, சூப்பர் இம்போசிசன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அடையாளம் காண போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதுவரை மீட்கப்பட்ட எலும்புகள் டி.என்.ஏ. மாதிரிக்கு அனுப்பப்பட்டு ஷ்ரத்தாவின் தந்தை விகாசின் டி.என்.ஏ.வுடன் ஒத்து போகிறதா என்பது கண்டறியப்படும். கொலையாளி உடல் உறுப்புகளை நறுக்கி சேமித்து அகற்றும் போது ஆர்த்தோ போரிக் அமிலம் (போரிக் பவுடர்) மற்றும் வேறு சில ரசாயனங்களையும் பயன்படுத்தியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஷ்ரத்தாவின் பள்ளி நண்பர் லட்சுமணன். குடும்பத்தினருடன் தொடர்பு இல்லாததால் அவர் தனது நண்பருடன் வாழ்வின் துயரங்களை பகிர்ந்துள்ளார்.

கடந்த 2 மாதங்களாக ஷ்ரத்தாவை லட்சுமணனால் தொடர்பு கொள்ள இயலவில்லை. இதனால் அவர் தான் ஷ்ரத்தாவின் சகோதரருக்கு தகவல் கொடுத்தார். இதற்கு பிறகே அவர் கொல்லப்பட்ட விவரம் தெரியவந்தது. தற்போது போலீசார் ஷ்ரத்தா விவகாரம் தொடர்பாக லட்சுமணனிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இதற்கிடையே அப்தாப் போதை பழக்கத்துக்கு அடிமையானவரா என்பதை கண்டறிய அவருக்கு போதை மருந்து சோதனையும் நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து இருக்கும் போது அப்தாப் பல பெண்களை வீட்டுக்கு அழைத்து வந்ததாகவும் தெரிகிறது. அந்த பெண்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.