;
Athirady Tamil News

சிரியா உள்நாட்டு மோதலுக்கு புதிய போர்நிறுத்தம் அறிவிப்பு! வெளியேறும் அரசுப் படைகள்!

0

சிரியா நாட்டின் ஸ்வேடா மாகாணத்தில், துரூஸ் இன ஆயுதக்குழுவுடனான மோதல்களுக்கு, புதியதாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து அரசுப் படைகள் வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துரூஸ் இனமக்கள் அதிகம் வசிக்கக் கூடிய ஸ்வேடா மாகாணத்தில், அந்த இனத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுவும், பொதூயின் ஆயுதக் குழுவினரும் தொடர்ந்து மோதல்களில் ஈடுபட்டு வந்தனர். இத்தகையச் சூழலில், மோதலைக் கட்டுப்படுத்த சிரியாவின் இடைக்கால அரசின் ராணுவப் படைகள் ஸ்வேடா நகரத்தினுள் நுழைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, துரூஸ் ஆயுதக் குழுவுக்கும், சிரியா ராணுவத்துக்கும் இடையில் மோதல்கள் தொடங்கியது. இதில், துருஸ் குழுக்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் ராணுவம் களமிறங்கி சிரியா ராணுவத்தின் மீது தாக்குதல்கள் நடத்தியது.

இந்நிலையில், டமாஸ்கஸ் நகரத்திலுள்ள ராணுவத் தலைமையகத்தின் மீது, நேற்று முன்தினம் (ஜூலை 16) இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அமெரிக்கா, துருக்கி மற்றும் அரபு நாடுகளின் தலைமையில், சிரியாவின் இடைக்கால அரசின் அதிகாரிகள் மற்றும் துரூஸ் இனத் தலைவர்கள் இடையில் புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாக சிரியாவின் உள்துறை அமைச்சகம் மற்றும் துரூஸ் மதத் தலைவர்கள் விடியோ வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், கடந்த ஜூலை 15 ஆம் தேதி அன்று கொண்டுவரப்பட்ட முந்தைய போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாகக் கைவிடப்பட்டதால், தற்போது இந்தப் போர்நிறுத்தமானது நீடிக்குமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், போர்நிறுத்தம் தற்போது வரை அமலில் உள்ளதால், ஸ்வேடா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகள் கைவிடப்பட்டு அங்கிருந்து, நேற்று (ஜூலை 17) இரவு முதல் அரசுப் படைகள் வெளியேறி வருகின்றன.

முன்னதாக, துருஸ் இனக்குழுவும், பொதூயின் ஆயுதக்குழுவும் தொடர்ந்து பரஸ்பர தாக்குதல்களிலும், ஆள் கடத்தல்களிலும் ஈடுபட்டு வந்தது மோதலாக உருவானது. இந்த மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை சிரியா அரசு இதுவரையில் வெளியிடவில்லை.

ஆனால், இந்த மோதல்கள் மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் ஆகியவற்றால் சுமார் 374 பேர் கொல்லப்பட்டிருக்கக் கூடும் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.