;
Athirady Tamil News

காஸாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல்! 2 பேர் கொலை!

0

காஸாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயத்தின் மீது இஸ்ரேல் நடத்திய ஷெல் தாக்குதல்களில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் உயிர்பிழைத்த நூற்றுக்கணக்கான கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள், அங்குள்ள ஒரேயொரு கத்தோலிக்க ஹோலி ஃபேமிலி தேவாலயத்தின் வளாகத்தில் தஞ்சமடைந்திருந்தனர். இதில், ஏராளமான குழந்தைகளும் இருந்தாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்தத் தேவாலயத்தின் மீது நேற்று (ஜூலை 17) இஸ்ரேல் ராணுவம் ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், அங்கு பணிப்புரிந்த 60 வயது ஊழியர் மற்றும் சிகிச்சை பெற்று வந்த 84 வயது மூதாட்டி ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல்களில், மறைந்த போப் பிரான்சிஸின் நெருங்கிய நண்பரான பாதிரியார் கேப்ரியல் ரோமனெல்லி உள்ளிட்ட ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போர்நிறுத்தம் வேண்டும் – வலியுறுத்தும் போப்

இந்நிலையில், காஸா மீதான தாக்குதல்களை உடனடியாக முடிவுக்கொண்டு வந்து போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு பதினான்காம் லியோ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, வாடிகன் நகரம் வெளியிட்டுள்ள செய்தியில், காஸா தேவாலயத்தின் மீதான தாக்குதல்களில் பலியானோர்களுக்கு, போப் பதினான்காம் லியோ தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதாகவும், உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என அவர் வலியுறுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாக்குதலில் காயமடைந்த பாதிரியார் கேபிரியல் ரோமனெல்லியிடம் வாடிகன் அதிகாரிகள் நலம் விசாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்தாலி பிரதமர் குற்றச்சாட்டு!

காஸாவில் பல மாதாங்களாக மக்கள் குடியிருக்கும் பகுதிகளின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் ஏற்புடையதல்ல என்றும், அல்- அஹ்லி மருத்துவமனை மற்றும் தேவாலயம் ஆகியவற்றின் மீது கடந்த ஒரு வாரமாகவே இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி குற்றம்சாட்டியுள்ளார்.

மன்னிப்பு கோரிய இஸ்ரேல்!

இதுகுறித்து, இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து தாங்கள் விசாரணை நடத்தி வருவதாகக் கூறியிருந்தனர். இதையடுத்து, இஸ்ரேல் உள்துறை அமைச்சகம், காஸாவின் ஹோலி ஃபேமிலி தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு மன்னிப்பு கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, காஸாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயமான ஹோலி ஃபேமிலி தேவாலயத்தில், சுமார் 600 பேர் தஞ்சமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மறைந்த போப் பிரான்சிஸ் அவரது இறுதி 18 மாதங்களில் நாள்தோறும் மாலை 7 மணிக்கு அந்தத் தேவாலயத்தைத் தொடர்புக்கொண்டு அங்குள்ள நிலவரத்தைத் தொடர்ந்து கேட்டறிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.