;
Athirady Tamil News

”அவதூறு வார்த்தைகள் பேசுவது மூத்த தலைவருக்கு அழகல்ல” – அசோக் கெலாட்டுக்கு சச்சின் பைலட் பதில்..!!

0

ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. சச்சின் பைலட்டுக்கும் இடையிலான மோதல் முற்றி உள்ளது. சச்சின் பைலட் ஒரு துரோகி, அவர் முதல்-மந்திரி ஆக முடியாது என்று அசோக் கெலாட் கூறியிருந்தார். இதற்கு சச்சின் பைலட் பதில் அளித்துள்ளார். ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- “அசோக் கெலாட் என்னை குறிவைத்து பேசி இருப்பதை பார்த்தேன். என்னை ‘துரோகி’, ‘உபயோகம் இல்லாதவன்’ என்றெல்லாம் அவர் கூறி இருக்கிறார். இத்தகைய அவதூறு வார்த்தைகளை பேசுவது நீண்டகால அனுபவம் வாய்ந்த, ஒரு மூத்த தலைவருக்கு அழகல்ல. அவர் சொல்வது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள். நீண்ட காலமாகவே அசோக் கெலாட் என் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இந்த நேரத்தில் நாம் பா.ஜனதாவுக்கு எதிராக ஒற்றுமையாக போராட வேண்டும். அசோக் கெலாட் மூத்த பார்வையாளராக உள்ள குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தியின் கரத்தையும், கட்சியையும் வலுப்படுத்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இது, பா.ஜனதாவை தோற்கடிக்க ஒன்றுபட்டு போராட வேண்டிய நேரம். ஏனென்றால், காங்கிரசால் மட்டுமே பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும். இந்த நேரத்தில் மாறி மாறி சேறு வாரி வீசுவது, எந்த பயனையும் அளிக்காது.” இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, அசோக் கெலாட்-சச்சின் பைலட் மோதல் தீர்த்து வைக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:- “அசோக் கெலாட், அனுபவம் வாய்ந்த, மூத்த அரசியல் தலைவர். தனது இளைய சகா சச்சின் பைலட்டுடன் அவருக்கு என்ன கருத்து வேறுபாடு இருந்தாலும், கட்சிக்கு வலுவூட்டும்வகையில் அதற்கு தீர்வு காணப்படும். இந்த நேரத்தில் பாதயாத்திரைக்கு வடமாநிலங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் ஒவ்வொரு காங்கிரசாரின் கடமையாக இருக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.