;
Athirady Tamil News

பிறவி குறைபாட்டால் பாதிப்பு: நாயின் இருதய அறுவை சிகிச்சைக்காக ஜெர்மனியில் இருந்து மும்பை வந்த டாக்டர்!!

0

மராட்டியம் மாநிலம் மும்பை ஜூஹூ பகுதியை சேர்ந்த ராணி ராஜ் வான்காவாலா என்பவர் நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். 4 வயதான அந்த செல்லப்பிராணி சமீப காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தது. சரியாக நடக்க முடியாமல் சோர்வுடன் காணப்பட்டது.

அந்த செல்லப் பிராணியை கால்நடை மருத்துவர்களிடம் அழைத்து சென்று காட்டினர். அப்போது அந்த நாய்க்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அந்த நாய் ‘பேட்டன்ட் டக்டஸ் ஆர்டெரியோசஸ்’ எனப்படும் பிறவி இருதய குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அந்த நாய்க்கு இருதய பெருநாடி மற்றும் நுரையீரல் தமனியின் 2 முக்கிய நாளங்களுக்கு இடையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. எனவே அந்த நாய்க்கு திறந்த இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கால்நடை டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

செல்லப்பிராணிகளுக்கு இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் கடினமானது எனவும், நாய்க்கு மயக்க மருந்து வழங்குவது சவாலானது எனவும் டாக்டர்கள் கருதினர். இந்தியாவில் இதுபோன்று செல்லப்பிராணிகளுக்கு திறந்த இருதய சிகிச்சை என்பது அரிதானது என கூறிய கால்நடை டாக்டர்கள் வெளிநாடுகளில் இதுபோன்ற சிகிச்சைகள் வழக்கமாக நடைபெறும் என்பதையும், ராணிராஜ் குடும்பத்தினரிடம் கூறினர்.

இதைத்தொடர்ந்து நாயை அறுவை சிகிச்சைக்காக இங்கிலாந்திற்கு அழைத்து செல்வதுதான் ஒரே வழி என்றும், அங்கு நாய்க்கு அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும் ராணிராஜ் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா தொற்று நோய் காரணமாக நாயை வெளிநாடு அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் நாயை எப்படியாவது குணப்படுத்த வேண்டும் என ராணிராஜ் குடும்பத்தினர் கூறினர். இதையடுத்து வெளிநாடுகளில் இதுபோன்று நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்த இருதய அறுவை சிகிச்சை நிபுணரான ஜெர்மனியை சேர்ந்த டாக்டர் மத்தியாஸ்பிரன்ங்குடன் மும்பை டாக்டர் தேஷ்பாண்டே தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர் இந்தியா வந்து நாய்க்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சை செய்ய சம்மதித்தார். அதன்படி அவர் விமானத்தில் மும்பை வந்து அந்தேரியில் உள்ள டாக்டர் மகரந்த் சவுசல்கரின் கிளினிக்கில் நாய்க்கு திறந்த இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

முதலில் அல்ட்ரா சவுண்ட் எந்திரத்தில் 2டி எக்கோ சோதனை நடந்தது. தொடர்ந்து நாய்க்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. 4 வராங்களுக்கு பிறகு அந்த நாய் தற்போது ஆரோக்கியமாக தனது வீட்டிற்கு திரும்பி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.