;
Athirady Tamil News

கர்நாடகாவை சேர்ந்த 8 பேருக்கு பத்ம விருது – சட்டப்பேரவை தேர்தல் காரணமா?

0

மத்திய அரசு நேற்று முன்தினம் பத்ம விருதுகளை அறிவித்தது. இதில் அதிகபட்சமாக, பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 8 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் பாஜகவை சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு (90) பொதுசேவைக்காக பத்ம விபூஷண் விருதுஅறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸில் இருந்து விலகி கடந்த 2017-ல் பாஜகவில் இணைந்த இவருக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இதனால் பாஜகவின் மீது அதிருப்தி அடைந்த எஸ்.எம்.கிருஷ்ணா அண்மையில் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் 2-வது உயரிய குடிமக்கள் விருதான பத்ம விபூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல பாஜக ஆதரவாளரும் எழுத்தாளருமான எஸ்.எல். பைரப்பாவுக்கு (92) இலக்கிய பணிகளுக்காக பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் பொறியியல் பங்களிப்புக்காக‌ காதர் வள்ளி துடுகுலாவுக்கும், தொல்லியல் துறை பணிகளுக்காக எஸ்.சுப்புராமனுக்கும், இசை பங்களிப்புக்காக பறை இசைகலைஞர் முனிவேங்கடப்பாவுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர சமூக சேவைக்காக இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி, கலை துறையில் ஷா ரஷீத் அஹமத் கத்ரி, ராணி மச்சையா ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த 8 பேருக்குபத்ம விருதுகள் வழங்கப்பட்டிருப்பதை முதல்வர் பசவராஜ் பொம்மை வரவேற்று, மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா தனக்கு பத்ம பூஷண் விருது கிடைத்ததற்கு மோடியே காரணம் என நன்றி கூறியுள்ளார். கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால், அங்கு பாஜக தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் என்ற நோக்கத்திலே 8 பேருக்குபத்ம‌ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

பத்ம விருதுகள் பெற்ற 8 பேரில் 5 பேர் மைசூரு மண்டலத்தைசேர்ந்தவர்கள். அங்கு பாஜக பலவீனமாக உள்ள நிலையில் அப்பகுதியில் 5 பேருக்கு விருது வழங்கியதன் மூலம் கட்சிக்கு மக்களிடையே நற்பெயர் கிடைக்கும் என்ற நோக்கில் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பாஜக ஆளும் கர்நாடகாவுக்கு 8 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளையில், பாஜக ஆளாதமாநிலங்களான‌ தமிழ்நாட்டுக்கு 6, கேரளாவுக்கு 4, மேற்கு வங்கத்துக்கு 3 விருதுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் அதிருப்தி அடைந்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.