;
Athirady Tamil News

ஈரானில் மக்கள் போராட்டத்தில் வெடித்த வன்முறை! உயிர்ப் பலிகள் 10 ஆக அதிகரிப்பு!

0

ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் வெடித்த வன்முறையால் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை எதிர்த்து அந்நாட்டு மக்கள் கடந்த சில நாள்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், ஈரானின் 22 மாகாணங்களின் 100-க்கும் அதிகமான பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் போராட்டங்களில், அரசுப் படைகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதல்களில் வன்முறை வெடித்துள்ளதாகவும்; இதனால், இதுவரை 10 பேர் பலியானதாகவும் கூறப்பட்டுள்ளது.

கோம் நகரத்தில் சனிக்கிழமை (ஜன. 3) அதிகாலை நடைபெற்ற வன்முறையில் அங்குள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் தீ வைக்கப்பட்டுள்ள விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

ஈரானில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மக்கள் மீது அரசு தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தினால், அவர்களை மீட்க அமெரிக்கா களமிறங்கும் என அதிபர் டொனால்ட் டிரம்ப், நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு, ஈரானின் முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், பொருளாதார நெருக்கடி குறித்து ஈரான் மக்களுடன் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தலைமையிலான அரசு பேச்சுவாரத்தை நடத்த முயல்வதாகத் தகவல்கள் வெளியாகின.

ஆனால், ஈரானின் பணமதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதால் அந்த முயற்சிகள் கைவிடப்பட்டன. ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரானின் பணமதிப்பு சுமார் 14 லட்சம் ரியாலாக குறைந்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஈரானில் மஹ்சா அமினி எனும் 22 வயது இளம்பெண் ஹிஜாப் அணியாத காரணத்தினால் காவல் துறையால் கைது செய்யப்பட்டு அவர்களது கட்டுப்பாட்டில் பலியானார்.

அதையடுத்து, அந்நாடு முழுவதும் வெடித்த மாபெரும் போராட்டத்தை ஈரான் அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.