;
Athirady Tamil News

ஹரியானா – குர்கானில் திபெத்திய அகதிகள் நடத்திவரும் குளிர்கால சந்தைத் தொகுதி!!

0

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கானில் அமைந்துள்ள திபெத்திய குளிர்கால கைத்தறி சந்தை வணிகர்கள் தங்கள் வர்த்தக செயற்பாடுகளை நிறைவு செய்ய தற்போது தயாராகி வருகின்றனர்.

இந்த நான்கு மாத குளிர்கால வணிக சந்தையானது ஒக்டோபரில் தொடங்கி பெப்ரவரி நடுப்பகுதியில் முடிவடைகிறது.

குர்கானில் இந்த திபெத்திய சந்‍தை 2005ஆம் ஆண்டு முதல் விரிவடைந்து வருகிறது.

அதன்படி, சுமார் 18 ஆண்டுகளாக சந்தையில் பிரதானமாக விளங்கும் குளிர்கால ஸ்வெட்டர் விற்பனை தொழிலை திபெத்தியர்களே செய்து வருகின்றனர்.

இச்சந்தையானது ஸ்வெட்டர்கள், கால்சட்டை, ஜீன்ஸ், டி-ஷர்ட்கள், கம்பளி ஸ்வெட்டர்கள், ஜாக்கெட்டுகள், கார்டிகன்கள், நீண்ட மற்றும் குறுகிய கோட்கள், காலணிகள், சால்வைகள், தொப்பிகள், மப்ளர்கள் மற்றும் கையுறைகள் உட்பட பலதரப்பட்ட தயாரிப்புகளை விற்பனைக்காக உள்ளடக்கியுள்ளது.

அங்கு மொத்தம் 91 கடைகள் உள்ளன. அதில் வேலை செய்யும் திபெத்திய விற்பனையாளர்கள் தர்மஷாலா, டேராடூன், சிம்லா, பைலகுப்பே, ஒடிசா மற்றும் அருஞ்சலப் பிரதேசம் போன்ற திபெத்திய குடியிருப்புகளை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இச்சந்தையின் கடந்த கால நிலைவரம் குறித்து தெரியவருவதாவது:

நாடு கடத்தப்பட்டு அகதிகளாக இந்தியாவை வந்தடைந்த திபெத்தியர்களின் மத்தியில் ஸ்வெட்டர் விற்பனை வணிகம் குறிப்பிடத்தக்க வருமான ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது.

1980களிலிருந்து இந்தியாவில் உள்ள திபெத்தியர்கள் குளிர்கால மாதங்களில் (ஒக்டோபர் – ஜனவரி) ஸ்வெட்டர்களை விற்பனை செய்வதில் மிக தீவிரமாக ஈடுபட்டனர்.

அக்காலத்தில் ஏற்பட்ட தொற்றுநோய்களினால் அவர்களது வாழ்வாதாரமாக இருந்த வணிகங்களும் அதன் செயற்பாடுகளும் முழுவதுமாக நிறுத்தப்பட்டன. அதனால் வியாபாரிகள் தங்கள் வருமான ஆதாரத்தை கைவிட வேண்டியிருந்தது.

இந்தியாவில் உள்ள 60 சதவீத திபெத்திய அகதிகளின் ஒரே வருமானம் குளிர்காலத்தில் ஸ்வெட்டர்களை விற்பதுதான். அதேவேளை ஏனைய குழுவினர் வேறு சில சிறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த திபெத்திய சந்தையை உள்ளூர் மக்களிடையே பிரபலமாக்கியது எதுவென ஆராய்ந்தால், கம்பளி ஸ்வெட்டர்கள், நியாயமான அளவிலான ஆடைகளின் தரம், விருந்தோம்பல்… மிக முக்கியமாக, வாடிக்கையாளர்களிடம் திபெத்தியர்கள் நடந்துகொள்ளும் விதம்… இவையே வணிகர்களிடம் காணப்படும் சிறப்பம்சங்கள் என கூறப்படுகிறது.

திபெத்திய சந்தை ஆடைகள் உள்ளூர் மக்களின் அதிக தேடலுக்கான பொருட்களாக அமைவதற்கு, அவற்றின் நீடித்து நிலைத்திருக்கும் தன்மை, மலிவு விலை, மற்ற உற்பத்திகளோடு ஒப்பிடும்போது காணக்கூடிய அந்த ஆடைகளின் உயர்ந்த தரம் என்பவையே காரணமாகும்.

திபெத்திய வணிகர்கள் ஸ்வெட்டர் வியாபார காலத்தின் கடைசி மாதத்தில் தயாரிப்புகளுக்கு 20 வீதம் தள்ளுபடி வழங்குவதோடு, அவர்களின் தயாரிப்புகள் அனைத்து விலைகளிலும் கிடைக்கப்பெறும் எனவும் தெரியவருகிறது.

மேலும், கடந்த 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் 28ஆம் திகதி இச்சந்தை திறக்கப்பட்டு, தற்போது அமோக வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.