;
Athirady Tamil News

48 கோடி பேர் ‘பான்’ எண்ணுடன் ஆதாரை இணைத்தனர்: மார்ச் 31-ந் தேதிக்குள் இணைக்காவிட்டால் சிக்கல்!!

0

நமது நாட்டில் ‘பான்’ என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கான அவகாசம் முடிந்து விட்ட நிலையில் தற்போது ரூ.1,000 கட்டணம் செலுத்தி இணைக்கிற நடைமுறை உள்ளது. இந்த நடைமுறையின் கீழ் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் ‘பான்’ எண்ணுடன் ஆதாரை இணைத்துவிட வேண்டும். அப்படி இந்த மார்ச் 31-ந் தேதிக்குள் ஆதாருடன் இணைக்கப்படாத தனிப்பட்ட ‘பான்’ எண்கள் செயலிழக்கச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா கூறியதாவது:- நமது நாட்டில் இதுவரை 61 கோடி தனிநபர் ‘பான்’ எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 48 கோடி தனி நபர் ‘பான்’ எண்களுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு விட்டன.

விதிவிலக்கு பெற்ற பிரிவினர் உள்பட 13 கோடி பேர் இணைக்கவில்லை. விதிவிலக்கு பிரிவினர் தவிர்த்து அனைவரும் குறிப்பிட்ட தேதிக்குள் (மார்ச் 31-ந் தேதி) இணைத்துவிடுவார்கள் என்று நம்புகிறோம். (அசாம், காஷ்மீர், மேகாலயா மாநிலத்தில் வசிக்கிறவர்கள், வருமான வரிச் சட்டம், 1961-ன் படி வசிக்காதவர்கள்; இந்திய குடிமகன் அல்லாத ஒருவர் விதிவிலக்கு பிரிவினர் ஆவார்கள்). இணைக்காதவர்கள் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் இணைத்துவிட வேண்டும். இணைக்காதவர்கள் பல்வேறு வணிக நடவடிக்கைகளை, வரி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்கிறபோது பலன் பெற மாட்டார்கள்.

பட்ஜெட்டில் அறிவித்தபடி பான் அட்டையை பொதுவான அடையாள அட்டையாக ஆக்குவதன் மூலம் தொழில் துறையினர் பலன் அடைய முடியும். இவ்வாறு அவர் கூறினார். ‘பான்’ எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் என்ன சிக்கல்கள் எழும் என்றால்- * ‘பான்’ எண் செயலற்றதாகி விடும். * செயலிழந்த ‘பான்’ எண்ணைக் கொண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. * வருமான வரித்துறையிடம் நிலுவையில் உள்ள பணத்தை (ரீபண்ட்) திரும்பப்பெற முடியாது.

* ‘பான்’ செயலிழந்தவுடன், குறைபாடுள்ள வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான நிலுவையில் உள்ள நடைமுறைகளை முடிக்க முடியாது. * ‘பான்’ எண் செயலற்றதாகி விட்டால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் எந்தவொரு செயலை மேற்கொள்வதும் கடினமாகி விடும். ஏனென்றால் கே.ஒய்.சி என்று அழைக்கப்படுகிற வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களில் ‘பான்’ எண் முக்கிய இடம் வகிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.