;
Athirady Tamil News

இ.போ.ச ஊழியர்களுக்கான சம்பளத்தை தாமதமின்றி வழங்க இணக்கம்!!

0

லங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்களுக்கான 2023 பெப்ரவரி மாத சம்பளத்தை இதற்கு முன்னரான மாதங்களில் வழங்கிய நடைமுறைக்கு அமைய தாமதம் இன்றி வழங்குவதற்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழு இணக்கப்பாட்டை வழங்கியது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இலங்கை போக்குவரத்து சபை கடந்த காலத்தில் அரசியல் மயப்படுத்தப்பட்டமையால் பணியாளர்களை உள்ளீர்ப்பதில் சரியான நடைமுறைகள் பின்பற்றப்படாமையால் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்பாக இவர்களுக்குக் காணப்படும் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தேசிய சம்பளங்கள் மற்றும் பதவியணிகள் ஆணைக்குழுவுடன் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இயங்க முடியாத நிலையிலுள்ள இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 400 பஸ்வண்டிகள் உள்ளடங்கலாக 1800ற்கும் அதிகமான பஸ்வண்டிகளை இவ்வருடம் சேவையில் இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்குத் தேவையான சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குழுவில் தெரிவித்தார்.

இதேவேளை, போதிய நிதி ஒதுக்கீடுகள் இன்மையால் பல்வேறு வீதி அபிவிருத்திப் பணிகளை இடைநிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. வெளிநாடுகளின் கடன் திட்டங்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கான கடன்கள் யாவும் இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும், சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுமாயின் இடைநிறுத்தப்பட்டுள்ள ஏனைய கடன் உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.