;
Athirady Tamil News

29 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திருமணம் செய்து கொண்ட தம்பதியர்- பின்னணி என்ன? !!

0

29 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதியர், 3 மகள்கள் பிறந்து வளர்ந்துவிட்ட நிலையில், தற்போது மீண்டும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு அவசியமும் நேர்ந்திருக்கிறது. இதுபற்றிய சுவாரசிய தகவல்கள் வருமாறு:- கேரளாவில் திரைப்பட நடிகராகவும் வக்கீலாகவும் இருப்பவர், சூக்கூர். இவரது மனைவி, ஷீனா சூக்கூர். இவர் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை இயக்குனராக உள்ளார். இந்த தம்பதியர் 1994-ம் ஆண்டு, அக்டோபர் 6-ந் தேதி தங்களது இஸ்லாமிய மத முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு கதீஜா ஜாஸ்மின், பாத்திமா ஜெபின், பாத்திமா ஜேசா என வளர்ந்த 3 மகள்கள் உள்ளனர். சூக்கூர்- ஷீனா தம்பதியர் திருமணம் முஸ்லிம் தனிநபர் சட்டப்படி (ஷரியத்) நடந்துள்ளதால், இவர்களது சொத்துக்களில் மூன்றில் இருபங்கு தான் மகள்களுக்குப்போகுமாம்.

எஞ்சிய ஒரு பங்கு சொத்து, சூக்கூர் சகோதரர்களுக்குத்தான் போகுமாம். சொத்துக்களை 3 மகள்களுக்குப் பிரித்து உயிலும் எழுதி வைக்க முடியாதாம். ஆனால் சொத்துக்களை 3 மகள்களுக்கும் சமமாக பிரித்துக்கொடுக்க விரும்பியதால், சூக்கூர்- ஷீனா தம்பதியர் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி, நேற்று ஹோஸ்துர்க் சார்பதிவாளர் அலுவலகத்தில் சிறப்பு திருமண சட்டத்தின்படி இந்த தம்பதியர் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் அவர்களுடைய 3 மகள்களும் கலந்து கொண்டனர்.

அப்போது கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பரிமாறி மகிழ்ந்தனர். இவர்களுடைய திருமணத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் வி.வி.ரமேஷன், கோழிக்கோடு வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் சஜீவ் ஆகியோர் சாட்சிகளாக இருந்து சார்பதிவாளர் அலுவலக பதிவேட்டில் கையெழுத்து போட்டார்கள். இதுபற்றி சூக்கூர் கூறியதாவது:- என் மகள்கள் பாலின பாகுபாட்டை சந்தித்திருக்கிறார்கள். இனியும் இதுபோன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்கவும், தாசில்தாரிடம் திருமண சான்றிதழ் பெற்று, சொத்துகளை மகள்களுக்கு சமமாக பங்கிட்டுக்கொடுக்கவும்தான் நாங்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

இவரது மனைவி ஷீனா சூக்கூர் கூறும்போது, “நாங்கள் விளம்பரம் தேடிக்கொள்ளவோ, முஸ்லிம் சமூகத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தவோ மீண்டும் திருமணம் செய்து கொள்ளவில்லை. பெண்களிடம் தன்னம்பிக்கையையும், கண்ணியத்தையும் ஏற்படுத்தும் முயற்சியாகத்தான் மறுமணம் செய்தோம். பல பெண்கள் தங்கள் குடும்பங்களில் ஆண் பிள்ளை இல்லாமல் இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்கிறார்கள். நாங்கள் இதைத் தவிர்க்கத்தான் எங்கள் மகள்களுக்காக மறுதிருமணம் செய்தோம்” என குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.