;
Athirady Tamil News

தேர்தலுக்கான நிதியை வழங்க முடியாது என்று நிதி அமைச்சு கூறவில்லை!!

0

தேர்தலுக்கான நிதியை வழங்க முடியாது என்று நிதி அமைச்சு கூறவில்லை என்றும், ஆனால் தற்போதைய நிலைமையில் நிதியை வழங்குவதில் காணப்படும் சவால்கள் தொடர்பிலேயே கூறுகின்றோம் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

தேர்தல் வேண்டாம் என்று நிதி அமைச்சோ, திறைசேரியோ தீர்மானிக்கவில்லை. தற்போதைய சவால்கள் தொடர்பில் ஆராய்ந்தே கதைக்கின்றோம். வருமானத்திற்கும் செலவுக்கும் இடையே
வேறுபாடுகள் இருக்கின்றன. வருமானத்தை விடவும் செலவு அதிகமாகவே உள்ளன.

மார்ச் மாதத்திலேயே அதிகளவில் செலவுகள் உள்ளன. அரச ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதிய கொடுப்பனவும், கடன் மீளச் செலுத்துகை, மருத்துவ வழங்கல், பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை விநியோகித்தல், உர விநியோகம் ஆகியவற்றை
செய்ய வேண்டும். இவற்றுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை ஏன் விநியோகிக்கவில்லை என்று கேட்கின்றனர். ஏதேவோரு முகாமைத்துவத்தை செய்தே தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம். அமைச்சருக்கு உள்ள அதிகாரத்திற்கமைய மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்காக நிதி முகாமைத்துவம் தொடர்பில் தீர்மானம் எடுக்கலாம். இதன்படி தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

முன்னுரிமை வழங்க வேண்டிய விடயங்களுக்கு முதலில் நிதியை வழங்க வேண்டும். இவற்றை பின்தள்ளி வைத்துவிட்டா, வேறு விடயத்திற்கு நிதியை வழங்க முடியும் என்று கேட்கின்றோம்.

முன்னுரிமை வழங்கும் விடயத்தில் எதனை நிறுத்துவது என்று கூறுங்கள். பெப்ரவரி மாதமே குறைவான வருமானம் கிடைக்கும் மாதமாக இருக்கும். இப்படி இருக்கையில் வேறு விடயத்திற்கு நிதியை ஒதுக்க முடியுமா?

இதேவேளை நிதி அமைச்சின் செயலாளர் தேர்தலை நடத்தாது இருப்பதற்காக பணத்தை வழங்காது இருப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இவர் சிறந்த அதிகாரி, நாட்டுக்காக தீர்மானங்களை எடுப்பவர். மூன்று தடவைகள் நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசியை சமர்ப்பித்து பணத்தை வழங்க முடியாது இருப்பதற்காக காரணத்தை கூறியுள்ளார்.

அவர் நிதியை வழங்க முடியாது என்று கூறவில்லை. இருக்கும் செலவுகளை சுட்டிக்காட்டியுள்ளார். வருமானத்திற்கும் செலவுக்கும் இடையே காணப்படும் வேறுபாடுகள் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

சவால்களையே அவர் குறிப்பிட்டுள்ளார் ஆனால் எப்போதும் நிதியை வழங்க முடியாது என்பதனை கூறவே இல்லை. ஏற்கனவே ஒருதொகை நிதி தேர்தலுக்காக வழங்கப்பட்டுள்ளது. இதனால் இதனை
வேறு கோணத்தில் இருந்து பார்க்க வேண்டாம் என்று கேட்கின்றோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.