கர்ப்பப்பை வாய் புற்றுநோய் : ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான உயிர்களை பறிக்கும் அமைதியான கொலையாளி
உலகளாவிய ரீதியில் பெண்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer), ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான உயிரிழப்புகளுக்குக் காரணமாகி வருகிறது. உலக சுகாதார அமைப்புகளின் தரவுகளின்படி, உலகம் முழுவதும் வருடாந்தம் சுமார் 6 இலட்சம் புதிய கர்ப்பப்பை வாய் புற்றுநோய் நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 3 இலட்சத்து 40 ஆயிரம் பெண்கள் இந்த நோயால் உயிரிழக்கின்றனர் என இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சச்சிமாலி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தொடர்பாக புதன்கிழமை (7) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.
ஆரம்பத்தில் கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்தலாம்
கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெற்றால், இந்த நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும் என வைத்தியர் சச்சிமாலி விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
தற்போது மருத்துவ அறிவியல் வளர்ச்சியுடன், இந்த நோய்க்கான சிகிச்சை முறைகளும் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளன. எனினும், நோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால், பல பெண்கள் தாமதமாகவே மருத்துவ ஆலோசனையை நாடுகின்றனர். இதன் விளைவாக, தவிர்க்கக்கூடிய உயிரிழப்புகள் அதிகரிப்பது கவலைக்குரியதாக உள்ளது.
இந்த நிலையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில், ஜனவரி மாதம் உலகளாவிய ரீதியில் ‘கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக’ உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்களில் மூன்றாவது இடம்
பெண்களிடையே அதிகமாக ஏற்படும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதலிடத்திலும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மூன்றாவது இடத்திலும் காணப்படுகிறது. உலகளாவிய அளவில் இது பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது.
இலங்கையைப் பொறுத்தவரை, 2022ஆம் ஆண்டு தரவுகளின்படி 226 புதிய கர்ப்பப்பை வாய் புற்றுநோய் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 2021ஆம் ஆண்டு மட்டும் 179 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். இலங்கையில் பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களின் பட்டியலில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
HPV வைரஸ் – பிரதான காரணம்
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான முக்கிய காரணமாக ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று காணப்படுகிறது. இந்த வைரஸ் பெரும்பாலும் பாதுகாப்பற்ற பாலுறவுகள் மூலமாக பரவுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு வைரஸை இயற்கையாகவே நீக்கிவிடுகிறது. ஆனால் சில பெண்களில் வைரஸ் நீண்டகாலமாக உடலில் நிலைத்திருந்து, செல்களின் அசாதாரண வளர்ச்சியை ஏற்படுத்தி, காலப்போக்கில் புற்றுநோயாக மாறக்கூடும்.
தடுப்பூசி மற்றும் பரிசோதனை – உயிர் காக்கும் ஆயுதங்கள்
கர்ப்பப்பை வாய் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் தேசிய நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, 10 முதல் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவிகளுக்கு HPV தடுப்பூசி வழங்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை பெரிதும் குறைக்கிறது.
மேலும், 35 முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் கட்டாயமாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம் என வைத்தியர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக, மாதவிடாய் சுழற்சிக்கிடையில் ஏற்படும் அசாதாரண இரத்தப்போக்கு, அல்லது துர்நாற்றத்துடன் திரவம் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் தகுதிவாய்ந்த வைத்தியரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
விழிப்புணர்வே பாதுகாப்பு
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது தடுப்பதற்கும், ஆரம்பத்தில் கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்துவதற்கும் கூடிய ஒரு நோயாகும். எனவே, பெண்கள் தங்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்தி, தடுப்பூசி, முறையான பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை தவறாமல் பின்பற்றுவது அவசியம். சமூக ரீதியான விழிப்புணர்வே இந்த நோயிலிருந்து பெண்களின் உயிர்களை பாதுகாக்கும் மிகப்பெரிய ஆயுதமாகும்.