;
Athirady Tamil News

3-வது வாரமாக தொடரும் சூடான் உள்நாட்டு போர்: பலி எண்ணிக்கை 528 ஆக உயர்வு!!

0

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு ராணுவத்தின் ஒரு பிரிவான துணை ராணுவம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி தலைநகர் கார்டூமில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையம் போன்றவற்றை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக துணை ராணுவம் அறிவித்தது. இதனையடுத்து இந்த மோதல் உள்நாட்டு போராக உருவெடுத்தது. இந்த உள்நாட்டு போர் காரணமாக சூடானில் திரும்பிய திசையெங்கும் குண்டுமழை பொழிந்தது.

இதனால் அப்பாவி பொதுமக்கள், வெளிநாட்டினர் உள்பட பலர் உயிரிழந்தனர். எனவே இந்த போரை நிறுத்தும்படி ஐ.நா. சபை மற்றும் உலக நாடுகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதனையேற்று இரு தரப்பினரும் தற்காலிகமாக போர் நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனை பயன்படுத்தி இந்தியா உள்பட பல நாடுகள் தங்களது நாட்டின் தூதரக அதிகாரிகள், பொதுமக்களை விமானங்கள் மூலம் பத்திரமாக தாயகம் திரும்ப ஏற்பாடு செய்தனர். இதனால் பல்லாயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

ஆனால் 3 வாரங்களை தாண்டி நடந்து வரும் இந்த உள்நாட்டு போரால் தற்போது அங்கு பலியானோரின் எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தலைநகர் கார்டூம் மற்றும் மேற்கு டார்பூர் தவிர பெரும்பாலான மாகாணங்களில் போர் நிறுத்த நடவடிக்கையானது தற்போது அமைதியை கொண்டு வந்துள்ளதாகவும், பொதுமக்களுக்கான சுகாதார சேவைகள் அதிகரித்துள்ளதாகவும் அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.