;
Athirady Tamil News

பிரித்தானியா, அமெரிக்கா தடை: சீனாவுக்கு நாடு கடத்தப்பட்ட பிரின்ஸ் குழுமத்தின் நிறுவனர்

0

பிரின்ஸ் குழுமத்தின் நிறுவனரான சென் ஷி, கம்போடியாவிலிருந்து சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

ஒன்லைன் மோசடி
மோசடி மற்றும் சட்டவிரோத சூதாட்ட விடுதிகளை நடத்திய குற்றச்சாட்டுகளின் பேரில் சென் ஷி தேடப்படுவதாக சீன தேசிய ஒளிபரப்பு நிறுவனமான CCTV வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

சென் ஷியின் பிரின்ஸ் குழும நிறுவனங்கள் மீது அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஏற்கனவே தடை விதித்துள்ளன. மேலும், கடத்தப்பட்ட தொழிலாளர்களைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதற்காக, பெரிய ஒன்லைன் மோசடி மையங்களை இயக்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எல்லை தாண்டிய தொலைத்தொடர்பு மற்றும் மோசடி தொலைபேசி மையங்களை திறம்பட எதிர்த்துப் போராட கம்போடியா போன்ற நாடுகளுடன் சீனா தீவிரமாக ஒத்துழைத்து வருவதாக சீன வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கம்போடியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் சட்ட அமலாக்க ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா தயாராக உள்ளது. மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பளிப்பதற்கும் பிராந்திய நாடுகளிடையே ஒத்துழைப்பிற்கும் சீனா முன்னுரிமை அளிக்கும் என்றே மாவோ நிங் குறிப்பிட்டுள்ளார்.

சரணடையுமாறு
இந்த நிலையில், சென் ஷி குற்றக் குழுவின் முக்கிய உறுப்பினர்களின் தேடப்படும் நபர்கள் பட்டியலை சீனா வெளியிடவுள்ளதுடன், தலைமறைவாக உள்ளவர்கள் உடனடியாக சரணடையுமாறு வலியுறுத்துகிறது.

இதனிடையே, கம்போடியாவின் உள்விவகார அமைச்சகம் புதன்கிழமை அன்று, சென் உட்பட மூன்று சீன நாட்டவர்களை சீனாவிடம் ஒப்படைத்ததாகத் தெரிவித்தது.

இந்த நாடு கடத்தல்கள் சீனாவின் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டதாகவும், இது நாடுகடந்த குற்றங்களைத் தடுப்பதில் உள்ள ஒத்துழைப்பைப் பிரதிபலிப்பதாகவும் கம்போடியா கூறியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.