;
Athirady Tamil News

தமிழகத்தில் பா.ஜனதா இன்னும் வளரவில்லை- அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!!

0

மதுரை மாவட்டம் திருமங்கலம் கலைஞர் திடலில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு., பி.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:- தி.மு.க. அரசு யானை பலம் கொண்டது. தமிழகத்தில் எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழகம் வளர்ச்சி பெறுகிறது. தி.மு.க. ஆட்சியின் போது தான் தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

மதுரை மாவட்டத்தில் மட்டும் மதுரை-திண்டுக்கல் புறவழிச்சாலை, வைகை ஆற்றில் குறுக்கு பாலம், ஆண்டாள்புரம் பகுதியில் ரெயில்வே மேம்பாலம், திருப்பரங்குன்றம் சாலையில் மேயர் முத்துபாலம், மதுரை மாநகராட்சி கட்டிடம் அறிஞர் அண்ணா மாளிகை, மேலூர் சாலையில் ஒருங்கிணைந்த ஐகோர்ட்டு வளாகம் கட்டியதும் தி.மு.க. ஆட்சியில் தான். அதேபோல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை மட்டுமல்லாது தென்தமிழகமே பயன்படும் வகையில் ரூ.120 கோடியில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. திருமங்கலம் மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ள ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக மாவட்ட செயலாளர் மணிமாறன் முயற்சியால் மேம்பாலம் அமைய உள்ள இடத்தினை கையகப்படுத்த ரூ.22.88 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டார். மேலும் மேம்பாலம் கட்ட ரூ.33.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

இந்த ஆண்டிலேயே ரெயில்வே மேம்பாலம் கட்டப்படும். தமிழகத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடி பேர் பயனடைந்து உள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுவினர் கொரோனா காலத்தில் கடனை செலுத்த முடியாமல் பாதிக்கப்பட்டனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.2400 கோடி மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்து மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கியவர் மு.க.ஸ்டாலின். இது மக்கள் ஆதரிக்கும் திராவிடமாடல் ஆட்சியாக உள்ளது.

தமிழக கவர்னர் விரும்புவது மனுதர்மம், மனுநீதி. ஆனால் தமிழக முதலமைச்சர் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும், அனைவரும் சமம் என்ற சமூக நீதியை விரும்புகிறார். தமிழகத்தில் பா.ஜனதா வளரவில்லை. மத்தியில் உள்ள ஆட்சியை வைத்துக்கொண்டு அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டும் பணியை செய்கின்றனர். பா.ஜனதா வின் சலசலப்பு தமிழகத்தில் எடுபடாது. இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.