;
Athirady Tamil News

மாலி: நைஜா் ஆற்றில் படகு கவிழ்ந்து 38 போ் உயிரிழப்பு

0

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் வடக்கு பகுதியில் ஓடும் நைஜா் ஆற்றில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 38 போ் உயிரிழந்தனா்.

வடக்கு மாலியின் டிம்புக்டு பிராந்தியத்தில் உள்ள டிரே நகருக்கு அருகில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து உள்ளூா் அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

மாலியில் அல்-கொய்தா பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால், பாதுகாப்புக் கருதி நைஜா் ஆற்றில் இரவு நேரங்களில் படகுகள் செல்வதற்கோ அல்லது கரையில் நிறுத்துவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், விவசாயிகள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரை ஏற்றிக்கொண்டு வந்த ஒரு படகு, கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு டிரே நகருக்கு அருகில் வந்தது.

பாதுகாப்பு விதிகளை மீறி இரவு நேரத்திலேயே கரைக்குச் செல்ல முயன்றபோது, ஆற்றிலிருந்த பாறைகளின் மீது படகு மோதி விபத்துக்குள்ளானது. இதில் படகில் இருந்தவா்கள் ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டனா். மீட்புப் பணிகளின் மூலம் 23 போ் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 38 போ் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த விபத்தில் தனது குடும்பத்தைச் சோ்ந்த 21 உறவினா்களை இழந்த மூசா அக் அல்முபாரக் ட்ராரே கூறுகையில், ‘ஆற்றில் ஆங்காங்கே சிதறிக் கிடந்த உடல்களை மீட்கும் பணியில் அதிகாரிகளுக்கு உதவியாக இருந்தேன். பல உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன’ எனத் தெரிவித்தாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.