நடத்தையில் சந்தேகத்தால் 20 ஆண்டுகள் வீட்டில் அடைத்து மனைவி கொலை- ஆட்டோ டிரைவர் வெறிச்செயல் !!

ஆந்திர மாநிலம் நம் பள்ளியை சேர்ந்தவர் ஜஹாங்கீர். ஆட்டோ டிரைவர். அவரது மனைவி கனிஷ் பேகம் (வயது 40) கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். ஜஹாங்கீருக்கு திருமணம் ஆனது முதல் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மனைவியை வீட்டிலேயே அடைத்து வைத்தார். இந்நிலையில் கடந்த 12 நாட்களுக்கு முன்பு நம் பள்ளியில் இருந்து லங்கர் ஹவுஸ், பாக்தாத் காலனிக்கு குடி பெயர்ந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து ஆட்டோ ஓட்ட சென்ற ஜஹாங்கீர் மீண்டும் இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது மனைவியுடன் தகராறு செய்தார்.
கனிஸ் பேகத்தை சரமாரியாக தாக்கினார். அவரிடம் இருந்து தப்பிய கனிஷ் பேகம் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு எம்.டி.காலணியில் உள்ள தனது மூத்த சகோதரர் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் அங்கு சென்ற ஜஹாங்கீர், மனைவியை சமாதானம் செய்தார். குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டு மனைவியை மட்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டிற்கு வந்த பிறகு கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ஜஹாங்கீர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து மனைவியின் கழுத்தை அறுத்தார். இதில் கனிஸ் பேகம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். கத்தியில் ரத்தம் சொட்ட சொட்ட ஜஹாங்கீர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அவரை கைது செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கனிஷ் பேகம் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியின் மீது கொண்ட சந்தேகத்தால் 20 ஆண்டுகளாக வீட்டில் அடைத்து வைத்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.