;
Athirady Tamil News

தேர்தல் தோல்வியால் நாங்கள் தன்னம்பிக்கையை இழக்கவில்லை: பசவராஜ் பொம்மை பேட்டி!!

0

தற்காலிக முதல்-மந்திாி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- சட்டசபை தேர்தல் முடிவு வெளிவந்து 6 நாட்களுக்கு பிறகு முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியை காங்கிரஸ் தேர்ந்தெடுத்துள்ளது. புதிய முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும். அரசியலில் யாருக்கு ஆட்சியை வழங்க வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள். பா.ஜனதா எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பணியாற்ற மக்கள் ஆசிர்வாதம் வழங்கியுள்ளனர்.

காங்கிரஸ் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த கட்சி அளித்த வாக்குறுதிகள் மீது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்போது, நமது மாநிலத்தின் நிதிநிலையை சீர்குலையாமல் பார்த்து கொள்வதும் அவர்களின் கடமை. இந்த விஷயத்தில் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

எதிர்க்கட்சியாக நாங்கள் பொறுப்புடன் பணியாற்றுவோம். நிலம், நீர் விவகாரங்களில் அரசியல் இல்லாமல் பணியாற்ற வேண்டும். மக்களுக்கு அநீதி ஏற்படும் அரசை எச்சரிக்கை பணியை நாங்கள் செய்வோம். மாநிலத்தை வளர்ப்பதில் பெரிய சவால்கள் உள்ளன. கர்நாடகம் சுபிட்சமாக இருக்கும் மாநிலம். மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். பா.ஜனதாவின் தோல்வி குறித்து நாங்கள் சுயபரிசோதனை செய்து வருகிறோம். இந்த பணி பல்வேறு மட்டத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் 2, 3 நாட்களில் வெற்றி பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தோல்வி அடைந்த வேட்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

அதே கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க இருக்கிறோம். பா.ஜனதாவில் தலைமை பண்பு உள்ளவர்கள் அதிகம் பேர் உள்ளனர். சில பகுதிகளில் அரசின் திட்டங்களை கொண்டு செல்வதில் பின்னடைவு ஏற்பட்டது. தேர்தலுக்கு தயாராவதில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. அதனால் எங்களுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் தோல்வியால் நாங்கள் துவண்டுவிடவில்லை. நாங்கள் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. நாங்கள் மீண்டும் வீறு கொண்டு எழுவோம். இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.