ஒரு இரவில் 30,000 மின்னல் தாக்கங்கள் – பிரித்தானியாவிற்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கை

பிரித்தானியாவின் பல பகுதிகளுக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் பல பகுதிகளில் வெப்பத்துடன் கூடிய கனமழை மற்றும் 30 ஆயிரத்திற்கும் மேலான இடியுடன் கூடிய மின்னல் தாக்கங்கள் ஒரு இரவில் ஏற்பட்டதாக பிரித்தானியா வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கிய மின்னல் மற்றும் கனமழை தாக்கம், புது வரலாற்றை உருவாக்கியுள்ளது.
கெண்ட் பகுதியில், குறிப்பாக டோவர் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. அங்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படைகள் வீட்டினுள் புகுந்த வெள்ளத்தை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன.
வெப்ப அலையின் காரணமாக வெள்ளிக்கிழமை மேற்குச் சஃப்பால்க் பகுதியில் 29.4°C வரை வெப்பநிலை உயர்ந்தது. இது மே முதலாம் திகதி க்யூ, லண்டனில் பதிவான 29.3°C வெப்பத்தை விட அதிகமாகும். ஸ்காட்லாந்தில் மொரே பகுதியில் 25.7°C உயர்ந்த வெப்பநிலை பதிவானது.
அதிக ஈரப்பதமும் வெப்பமும் சேர்ந்து கடும் இடியுடன் கூடிய மழையை உருவாக்கியுள்ளது. ஹீத்ரோ விமான நிலையம் விமானங்களின் தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளது.
ஈஸ்ட் சஸ்ஸெக்ஸில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீயின் காரணம் மின்னல் தாக்கமே என தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வீரர்கள் தெரிவித்தனர்.
டேவன் பகுதியில் ஒரு நாளில் 36.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சுற்றுச்சூழல் துறை ஐந்து வெள்ள எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை மாலை 6 மணி வரை வடக்கு இங்கிலாந்து, வடக்கு ஐர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் பல பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கைகள் நீடிக்கின்றன.