;
Athirady Tamil News

புணேவில் ஆற்றுப்பாலம் இடிந்து விபத்து: 6 பேர் பலி, பலர் மாயம்

0

புணேவில் இந்திரயானி ஆற்றின் குறுக்கே இரும்புப் பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பலர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதால், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் புணே மாவட்டத்திற்குட்பட்ட மாவல் பகுதியில் இந்திரயானி ஆற்றின் குறுக்கே உள்ள இரும்புப் பாலத்தின் ஒரு பகுதி நேற்று (ஜூன் 15) பிற்பகல் இடிந்து ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டது.

கடந்த சில நாள்களாக அப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது. இதனிடையே இன்று பிற்பகல் இரும்புப் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து ஆற்றில் விழுந்துள்ளது. இச்சம்பவத்தில் 6 பேர் பலியாகியுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்துப் பேசிய தலேகான் பகுதிக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரி,

”குந்த்மலா பகுதியில் பாலம் இடிந்து விழுந்துள்ளது. முதல்கட்டத் தகவலின்படி, இச்சம்பவத்தில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுள்ளனர். மேலும், 25 – 30 பேர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தீயணைப்புப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், அதிக எண்ணிக்கையிலான மக்கள் இங்கு குவிந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களில் சுற்றுலாப் பயணிகளும் இருக்கலாம் என முதல்கட்டத் தகவலில் தெரியவந்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.

இடிந்த பாலத்தின் அருகே குவிந்த மக்கள்
இடிந்த பாலத்தின் அருகே குவிந்த மக்கள்PTI
விபத்துக்கு காரணம் என்ன?

பாலம் இடிந்து விழும்போது மழை பெய்யவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், ஆற்றில் வெள்ள நீர் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், பாலம் உடைந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உடைந்துள்ள இந்தப் பாலம் 5 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. எனினும், இதில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக உள்ளூர் மக்கள் பலமுறை புகார்கள் எழுப்பியுள்ளனர்.

தொடர் கனமழை காரணமாக புணேவின் பல்வேறு பகுதிகளுக்கு அதி கனமழைக்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கடந்த இரு நாள்களாக புணேவில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.



ரூ. 5 லட்சம் நிவாரணம்

பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ். மேலும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் சிகிச்சை செலவையும் மாநில அரசு ஏற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கோட்ட ஆணையர், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உடனடியாக நிவாரணப் பணிகள் தொடங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.