;
Athirady Tamil News

பல நாடுகள் தேடிய சீன கப்பலை துல்லியமாக கணித்த இந்திய விமானம்! !

0

இந்திய பெருங்கடலில் 39 பேருடன் மூழ்கிய சீன மீன்பிடி கப்பல் மற்றும் லைஃப் ராஃப்ட் ஆகியவற்றை இந்திய கடற்படையின் P8I விமானம் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல நாடுகளின் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஒரு பாரிய திருப்புமுனையாக, இந்திய கடற்படையினர் மூழ்கிய சீன மீன்பிடி கப்பலான Lu Peng Yuan Yu 28-ஐ கண்டுபிடித்துள்ளனர்.

இந்தியப் பெருங்கடலின் நடுவில் மூழ்கிய இந்த கப்பலில் 39 பணியாளர்களுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கப்பல் கன்னியாகுமரிக்கு தெற்கே தோராயமாக 1660 கிலோமீட்டர் தொலைவில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தோனேசியா, அவுஸ்திரேலியா, இலங்கை, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மீட்புக் குழுவினர், கடற்படையினர் கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டன.

அவற்றுடன், இந்திய கடற்படை அதன் மிக சக்திவாய்ந்த கடல்சார் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் வேட்டையாடும் விமானமான Boeing Poseidon (P8I) விமானத்தை தேடுதல் பணியில் ஈடுபடுத்தினர்.

இந்த விமானம் இரவும் பகலும் செயல்படும் திறன் கொண்டது, இதில் அதிநவீன சென்சார்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த விமானத்தை தாக்குதலுக்கும் தற்காப்புக்கும் பயன்படுத்த முடியும்.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, புலனாய்வு சேகரிப்பு, தேடுதல் மற்றும் மீட்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய கடற்படை P8I விமானத்தை பயன்படுத்திவருகிறது.

தமிழ்நாட்டின் அரக்கோணத்தில் உள்ள கடற்படை விமான நிலையமான ஐஎன்எஸ் ராஜாளியிலிருந்து ( INS Rajali in Arakkonam) இயக்கப்படும் பி8ஐ விமானம், கவிழ்ந்ததாக சந்தேகிக்கப்படும் பகுதியில் விரிவான சோதனை நடத்தி, சீன மீன்பிடி கப்பலை கண்டுபிடித்தது. கவிழ்ந்த இடத்தை அப்பகுதியில் இயங்கி வரும் சீன கடற்படை போர்க்கப்பல்களுக்கு (People’s Liberation Army Navy) இந்திய கடற்படை தெரிவித்தது.

மூழ்கிய கப்பலின் இரண்டு பணியாளர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மீதமுள்ள 37 பேரின் நிலை இன்னும் தெரியவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.