;
Athirady Tamil News

4 நிமிடங்களில் 195 நாடுகளை அடையாளம் காட்டிய 5 வயது சிறுவன் – புதிய சாதனை!! (PHOTOS)

0

உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலை நகரங்களையும் 4 நிமிடங்கள் 16 நொடிகளுக்குள் கூறி கலாநேசன் ஹர்சித் என்ற 5 வயது சிறுவன் புதிய சோழன் உலக சாதனையை படைத்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தின் லோவர் ஸ்லிப் பிரிவின், பெட்ரோ தோட்டத்தில் வசித்து வரும் கலாநேசன் மற்றும் லலிதாம்பிகை ஆகியோரின் புதல்வன் 5 வயதான ஹர்சித் என்ற சிறுவன் இந்த சாதனையை பதிவு செய்துள்ளார்.

இவர் நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரியில் ஆரம்பக் கல்வியை கற்று வருகிறார். இவருடைய ஞாபகத் திறனை ஊடகங்களின் மூலமாக அறிந்து கொண்ட தமிழ்நாட்டில் தலைமைச் செயலகத்தைக் கொண்டு உலகின் 26 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ள ‘பன்னாட்டுச் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தினர்’ இக்குழந்தையின் முயற்சியை முறைப்படி பரிசோதித்து உலக சாதனையாக அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.

இதற்கான நிகழ்வு நேற்று முன்தினம் (25) நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர்களான எஸ்.ரவிச்சந்திரன், என்.நவரத்னம், பொறுப்பதிகாரி எஸ்.ஆனந்தஜோதி மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

உலக சாதனை முயற்சிக்கு நடுவர்களாக நேரில் வந்து பார்வையிட்டு உறுதி செய்து உலக சாதனைக்கான சோழன் புத்தக நிறுவனத்தின் சான்றிதழ், நினைவுக் கேடயம், அடையாள அட்டை மற்றும் பதக்கம் போன்றவற்றை வழங்கி கௌரவித்தார்கள்.

குறித்த நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் தலைவர் முனைவர் ஜுட் நிமலன் மற்றும் இந்தியாவில் இருந்து வந்திருந்த தலைமைச் செயற்குழுவின் உறுப்பினர் பெருமாள் நீலமேகம் ஆகியோர் மாணவனுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

புதிய சோழன் உலக சாதனை படைத்த மாணவன் கலாநேசன் ஹர்சித்தை, நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் மற்றும் பொது தலைவர் மருத்துவப் பேராசிரியர் தங்கதுரை, 24 நாடுகளின் கிளைகளின் தலைவர்கள், மாநில மற்றும் மாவட்டத் தலைவர்கள் போன்றோர் வாழ்த்திப் பாராட்டியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.