;
Athirady Tamil News

பூண்டி ஏரியில் அதிகாரிகள் ஆய்வு !!

0

சென்னை குடிநீர் ஏரிகளில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3.231 டி. எம்.சி. தண்ணீரை சேர்த்து வைக்கலாம். கோடை காலங்களில் வெயில் காரணமாக இந்த ஏரி முழுவதுமாக வறண்டு விடும்போது சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீர் சேமிக்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா நேற்று மாலை பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது நீர் தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் உள்ள ஆகாயத் தாமரை, பிற நீா்த்தாவரங்கள் மற்றும் இதர கழிவுப் பொருள்களை வரும் பருவ மழைக்கு முன்பாக அகற்ற வேண்டும்.

மேலும், இணைப்பு கால்வாயின் இருபுறமும் சேதம் அடைந்துள்ள சாய்வு தளங்களை பராமரிப்பு செய்து கால்வாயின் இரு புறமும் குடியிருக்கும் மக்கள் கால்வாயில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டாமல் தகவல் பலகைகள் வைத்து விழிப்புணா்வை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் சென்னையின் மிக முக்கிய குடிநீா் ஆதாரமாக பூண்டி இணைப்பு கால்வாய்களில் தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவு நீரை கலப்பவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை வழங்கினாா். இந்த ஆண்டு பருவ மழை முடிந்தவுடன் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

அப்போது குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய நிர்வாக இயக்குனர் கிரிலோஷ் குமார், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வர்கீஸ், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் அசோகன், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் தலைமை பொறியாளர் ஜேசுதாஸ், திருவள்ளூர் கொசஸ்தலையாறு வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். பின்னர் இவர்கள் புதிதாக கட்டப்பட்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.