அமெரிக்க கடல்பகுதியில் மெக்சிகோ கடற்படை விமானம் விபத்து! 5 பேர் பலி!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் கடல்பகுதியில், மெக்சிகோ கடற்படையின் சிறிய ரக விமானம் விழுந்து விபத்தில் சிக்கியது. இதில், 5 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ கடற்படையின் சிறிய ரக விமானம், 4 கடற்படை வீரர்கள் மற்றும் ஒரு குழந்தை உள்பட 8 பேருடன் நேற்று (டிச. 22) அவசர மருத்துவப் பணியாக பயணம் மேற்கொண்டிருந்தது.
இந்த விமானத்தில், தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் தன்னார்வலர்கள் இருவரும் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, டெக்சாஸ் மாகாணத்தின் கல்வெஸ்டன் நகரின் அருகில் உள்ள கடல்பகுதியில் அந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 5 பேர் பலியாகினர். மேலும், அமெரிக்க கடலோரக் காவல் படை, மெக்சிகோ கடற்படை மற்றும் தன்னார்வலர்கள் மேற்கொண்ட தேடுதல் பணிகளில், பயணிகள் சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்துடன், இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அப்பகுதியில் நிலவிய மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் விபத்துக்கான காரணமாக இருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.