பாராளுமன்ற தேர்தலில் 440 இடங்களில் பொது வேட்பாளர்களை நிறுத்தும் இந்தியா கூட்டணி!!

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியின் முதலாவது ஆலோசனை கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும் நடந்த நிலையில், 3-வது கூட்டம் மும்பையில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இந்த கூட்டத்தில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவார், ஹேமந்த் சோரன், உமர் அப்துல்லா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
நேற்று நடந்த கூட்டத்தில் தேர்தலை சந்திக்கும் வியூகம் குறித்த கருத்துக்களை பல்வேறு கட்சி தலைவர்களும் தெரிவித்தனர். மேலும் இந்த கூட்டத்தில் சில முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. பாரதிய ஜனதா கட்சி ஆளும் கட்சியாக அல்லது பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் மாநிலங்களில் இந்தியா முன்னணி ஒரு பொது வேட்பாளரை நிறுத்தும். அதன்படி 440 இடங்களில் பாரதிய ஜனதாவிற்கு எதிராக பொது வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள்.
கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பொது வேட்பாளர்கள் யாரும் நிறுத்தப்பட மாட்டார்கள். அடுத்த மாத இறுதிக்குள் அதிகபட்ச வேட்பாளர்கள் எண்ணிக்கை குறித்து முடிவு செய்யப்படுகிறது. தேர்தல் ஏற்பாடுகளை மேற்பார்வையிடவும், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக வைத்திருக்கவும் 5 குழுக்களை இந்தியா முன்னணி அமைத்தது. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் 14 பேர் கொண்ட குழுவில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் சேர்க்கப்பட்டார்.
தேர்தலில் ‘பாரதம் ஒன்றுபடும், இந்தியா வெல்லும்’ என்பதே முழக்கமாக இருக்கும். காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ந்தேதி இந்தியா முன்னணியின் தொலைநோக்கு அறிக்கை ராஜ்காட்டில் அறிவிக்கப்படும். வருகிற மாதங்களில் 5 முக்கிய நகரங்களில் பேரணிகள் நடத்தப்படும். இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் கூட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் நேற்று நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.