;
Athirady Tamil News

வடக்கில் வலுக்கும் வல்வளைப்பு : பிசுபித்துப் போகும் சீனாவின் முயற்சிகள்

0

தென் கிழக்காசியப் பிராந்தியத்தில் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கும் இடையில் நிலவி வருகின்ற வல்லரசுப் போட்டி உலகறிந்த விடயம். குறிப்பாக இலங்கையில் தமது ஆதிக்கத்தை நிரூபிப்பதில் இரு நாடுகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கடுமையான பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இலங்கையின் அதிகேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமாலைத் துறைமுகத்தின் மீதான ஆதிக்கத்தில் இந்தியா அக்கறை கொண்டு – அதற்கான நகர்வுகளை மேற்கொண்டிருக்க தெற்கில் அம்பாந்தோட்டையையும், துறைமுக நகரத்தையும் வைத்து சீனா காய் நகர்த்தியது. ஆனாலும் இலங்கை அரசியலிலும் சரி பொருளாதார ரீதியாக வருமானத்திலும் சரி கணிசமான – சொல்லிக் கொள்ளத்தக்க பங்கை வகிக்கக் கூடிய தமிழர்களையும், தமிழர் பிரதேசங்களையும் வளைத்துப் போடாமல் ஆகப் போவது ஒன்றுமில்லை என்ற ஒரு உண்மையை இரு நாடுகளும் உணரத் தலைப்பட்டுள்ளன.

எனினும், தமிழர்கள் – தமிழர் பிரதேசங்கள் மீதான இந்தியாவின் கரிசனை தவறாக அர்த்தம் கற்பிக்க முடியாத அளவுக்கு நியாயப்பாடுகளைக் கொண்டுள்ளது. இந்தியாவின் தமிழகத்துக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான பிணைப்பு ஒரு வரலாற்றுப் பின்னணியைக் கொண்டமைந்ததாகும். ஈழத் தமிழர்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டிய ஒரு கடப்பாடு இந்தியாவுக்கு என்றும் உண்டு. தவிர இதுவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா இலங்கையின் எந்தப் பகுதியையும் ஆக்கிரமிக்கும் நோக்குடன் வல்வளைப்புச் செய்வதற்கான எத்தனங்களில் ஈடுபடவில்லை.

மறாக, சீனா தெற்கில் முதலீடு என்ற போர்வையில் செய்த அத்தனை திட்டங்களும் செத்துக்களையும், நிலங்களையும் வல்வளைப்புச் செய்து ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்துவதாகவே அமைந்துள்ளது. ஹம்பாந்தோட்டை ஆகட்டும், துறைமுக நகராகட்டும் முதலீடு என்ற பேரில் ஆக்கிரமித்து அதிகாரத்தைப் பிரயோகித்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

தெற்குக்கு ஈடாக வடக்கு – கிழக்கு பகுதிகளில் மானசீகமாக மக்களோடு இந்தியாவின் செல்வாக்கு அதிகமாகக் காணப்படுவதை உணர்ந்து கொண்ட சீனா, இப்போது வடக்கிலும், கிழக்கிலும் பல்வேறு வழிகளில் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தத் தலைப்படுகிறது. எந்தெந்த வழிகளில் எல்லாம் நுழைய முடியுமோ அந்தந்த வழிகளையெல்லாம் தேடித் துளைத்து உள் நுழைவதற்கு சீனா முனைகிறது. கிழக்கில் அதன் முயற்சி ஓரளவுக்கு வெற்றி கண்டிருந்தாலும், வடக்கில் மக்கள் மனங்களை வென்று உள் நுழைவதென்பது முயல் கொம்பாகவே இருக்கின்றது.

2016 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலுள்ள சகல பல்கலைக் கழகங்களுக்கும் வழங்கப்பட்டு வந்த சீனத் தூதுவரின் புலமைப்பரிசில் நிதியுதவி கடந்த வருடம் முதல் திடீரென வடக்கில் உள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும், கிழக்கில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்துக்கும் மட்டுப்படுத்தப்பட்டது. அத்துடன் என்றுமில்லாதவாறு சீனப் பல்கலைக்கழகங்கள் இந்த இரண்டு பல்கலைக்கழகங்களுடனும் ஆய்வு நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடுவதற்கும் முண்டியடிக்கத் தொடங்கின. எல்லாவற்றுக்கும் மேலாகத் தம்முடன் இயைந்து போன சில விரிவுரையாளர்களின் மூலம் மாணவர்களுக்கு இலவச தங்குமிடம், போக்குவரத்து வசதிகளை வழங்கி “பெல்ட் அண்ட் ரோட்” திட்டத்தின் கீழ் சில சுற்றுலா வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. இதன் மூலம் தமிழர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க மாணவத் தலைவர்களைக் கையாளவதற்குச் சீனா முனைகிறது என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் எழத் தொடங்கியது. ஆனாலும் கிழக்கில் தமிழ் மாணவர்கள் தொகை குறைவென்பதால், தமிழ் மாணவர்கள் தமது எதிர்ப்பைப் பதிவு செய்வதற்குள் சீனத் தூதுவர் புலமைப் பரிசில் திட்டமும், சீன மொழிப் பயற்சி நிலையமும் கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குள் தளம் கொண்டுவிட்டன.

ஆனால், ஈழ விடுதலைப் போராட்டத்தின் போது, ராஜபக்ஃஸ அரசாங்கத்தோடு கூட்டுச் சேர்ந்து நின்று இரசாயன ஆயுதங்கள் முதற்கொண்டு போரியல் ஆதரவை வழங்கியதிலிருந்து, போருக்குப் பின்னரான காலப் பகுதியில் போர்க்குற்றத்துக்கு நீதி வேண்டி ஒட்டுமொத்தத் தமிழனமும் குரல் கொடுத்த நேரத்தில், போர்க்குற்ற விசாரணை தேவையற்றதொன்று எனச் சாரப்பட சீனத் தூதுவர் ருவிற்றர் மூலம் வெளியிட்ட செய்தி பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் சீனா மீது கொதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் சீனப் பல்கலைக்கழகங்கள் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும், சீனத் தூதுவரின் வருகையையும் கண்டித்து பல்கலைக்கழ மாணவர் ஒன்றியம் பகிரங்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது. அத்துடன் சீனாவில் நடைபெறவிருந்த இரு நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தரை முழு அனுசரனையுடன் அழைத்த போதும், மாணவர்களின் மனநிலை காரணமாக அவர் அவ்விரண்டு அழைப்புகளையும் நிராகரித்திருந்தார். இதனால் வடக்கில் பல்கலைக்கழகத்தின் ஊடாகக் கால் பதிக்கும் திட்டத்தை சீனா கைவிட வேண்டியநிலை ஏற்பட்டது.

இதையடுத்து சீனா இப்போது வடக்கின் கடல் வளத்தைக் குறிவைத்துக் காண் நகர்தத்த் தொடங்கியிருக்கிறது. வடக்கில் ஆழ் கடலல்லாத பகுதிகளில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதிலும், ஆழ் கடல் மீன் பிடியில் ஈடுபடுவதற்கும் முழுமையாக இறங்கியிருக்கிறது. அண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்த கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தாவிடம் மீன்பிடித்துறையை மேம்படுத்த ரூபா 150 கோடியைச் சீன அரசாங்கம் மானியமாக வழங்கியிருக்கிறது. ஆனாலும் வடக்கு மீன்பிடித்துறையில் சீனாவின் ஆகிக்கம் அதிகரித்து வருகின்றமை பலத்த கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. தமிழர்களின் பூர்வீகத் தாயகமான வடக்கு – கிழக்கு பகுதிகளில் சீனா வலிந்து ஆதிக்கம் செலுத்த முனைவது தமிழர்களில் வாழ்வாதாரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகும் என்று கடற்றொழிலாளர் சங்கங்கள் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றன.

கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் அனுசரணையோடு வெளிநாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பினுள் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குவதற்கான ஒப்பந்தமும், சீனாவில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் வடக்கில் மீன் வளத்தைக் குறைக்கும் வகையில், கடற்றொழிலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் கடலட்டை செய்கையிலும் சீனா ஈடுபடத் தொடங்கியுள்ளது. இதனால் இயற்கையாகக் கிடைக்கும் கடல் வளங்கள் நேரடியாகப் பாதிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், நீண்டகால உரிமத்தை வழங்குவதனூடாகப் பாரம்பரியமாகக் கடற்றொழிலில் ஈடுபடும் சுதேசிகளுக்குப் பெரும் சவாலாகவும் இது அமைகிறது.

இதனால், தமிழ்த் தேசியம் சார்ந்து செயற்படுகின்ற கட்சிகளும், சீனாவில் வல்வளைப்பு முயற்சிகள் மீதான தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சீனாவில் வல்வளைப்பு முயற்சிகள் பற்றிப் பகிரங்கமாகப் பேசி வருகின்றன.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான க. சுகாசும் பூகோள ரீதியாக ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை இந்தியாவும் வெளிநாடுகளும் தலையிட்டு விரைவாக வழங்க வேண்டும் என்று சாரப்பட வற்புறுத்தியிருக்கின்றனர்.

தமிழ் அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சீனா இங்கு வருவதை விரும்பவில்லை. இந்தியாவின் நெருங்கிய கடல்சார் அண்டை நாடான இலங்கை, அதனுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்க வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. ஆனால், இந்தியாவின் எதிர்ப்பைக் கண்டு சீனா பின்வாங்கத் தயாராக இல்லை. வடக்கு – கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களின் மீன்பிடித் துறையில் மேலும் முதலீடு செய்ய சீனா ஆர்வம் காட்டி வருகின்றது.

“பூகோள போட்டி காரணமாக யாழ்ப்பாணம் வருகை தர உள்ள தூது குழு கடல் அட்டை விரிவாக்கத்திற்கும் தாயக பகுதிகளை கண்காணிக்கவும் வருவது ஆபத்தான விடயம். இலங்கை கடலால் சூழப்பட்ட தீவாக காணப்படுகின்ற நிலையில், எமது கடல் வளம் வெளிநாட்டு சக்திகளுக்கு தாரைவார்க்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் சீனாவிடம் இருந்து மீன்கள் இறக்குமதி செய்வதற்கான உடன்படிக்கையை செய்துள்ள நிலையில் எமது கடல் வளமும் சீனாவுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.

எமது கடல் வளத்தை எமது கடற்றொழிலாளர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் எதிர்காலத்தில் எமது கடற்றொழிலாளர்களும் சீனாவின் மீன்களை உண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பூகோள ரீதியாக ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை இந்தியாவும் வெளிநாடுகளும் தலையிட்டு விரைவாக வழங்க வேண்டும்.

ஆகவே பூகோள ரீதியாக ஏற்பட்டுள்ள சீனாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்கு, தமிழர் பிரச்சனைக்கு தீர்வு வழங்காவிட்டால் அயல் நாடான இந்தியாவின் இறையாண்மைக்கும் பங்கம் ஏற்படும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான க. சுகாஸ் அண்மையில் பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் பகிரங்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியாவில் சீனா தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவே இலங்கையில் ஆதிக்கத்தை அதிகரித்துக் கொண்டு இருப்பதான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். சீன ஆய்வுக் கப்பலான ஷியான் 6 இன் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் இந்தியா தமிழர்களை எதிரியாகவும் சிங்களவர்களை நண்பனாகவும் கொண்டு செயற்படுவது போல இலங்கை தமிழர்களையும் இந்தியாவையும் எதிரியாகவும் சீனாவை நண்பனாகவும் சிங்கள மக்கள் கொண்டு செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே சீனா செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், சீனாவின் செயற்பாடுகளை இந்தியா தெளிவாக புரிந்துக் கொள்ளாவிடின் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிடும் என்றும் விடுதலை புலிகளின் செயற்பாடு இலங்கையில் இருந்த போது இந்தியாவிற்கு பாதுகாப்பு அதிகமாக இருந்தது என்பதை அந்த நாடு இதுவரை உணரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அவரது இந்தக் கருத்து மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சீனா பல வழிகளிலும் வடக்கை வல் வழைளப்புச் செய்வதற்கு எடுத்துவரும் முயற்சிகள் அனைத்தும் புஸ் வாணமாகிப் போய்விடும் நிலைமை காணப்படுவது வெளிப்படையாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.