;
Athirady Tamil News

ஒரே நாளில் மூன்று தடவைகள் பழுதடைந்து வீதியில் நின்ற பேருந்து – தரமான போக்குவரத்து சேவையை எதிர்பார்த்து காத்திருக்கும் வடமராட்சி கிழக்கு மக்கள்

0

வடமராட்சி கிழக்கு பகுதிக்கு தரமான பேருந்து சேவையினை வழங்குமாறு அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் , பழுதடைந்த பேருந்து ஒன்றே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பருத்தித்துறை – கேவில் இடையில் சேவையில் ஈடுபட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாத்திரம் மூன்று தடவைகளுக்கு மேல் பழுதடைந்த நிலையில் வீதியில் நின்றமையால் ,பயணித்த பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

கேவிலில் இருந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை பருத்தித்துறை நோக்கி பயணித்த பேருந்து மருதங்கேணி பகுதியில் பழுதடைந்து வீதியில் நின்றது. பின்னர் பேருந்தின் பழுது சீர் செய்யப்பட்டு புறப்பட்ட நிலையில் மீண்டும் இடையில் பேருந்து பழுதடைந்தது. நீண்ட நேரத்தின் பின் பழுது சீர் செய்யப்பட்டு பருத்தித்துறையை பேருந்து வந்து சேர்ந்தது.

பேருந்து இரண்டு தடவைகள் வீதியில் பழுதடைந்து காணப்பட்டமையால் , பேருந்தில் பயணித்த மக்கள் நீண்ட நேரத்தின் பின்னரே பருத்தித்துறை பகுதியை வந்தடைந்தனர்.

பின்னர் மாலை அதே பேருந்து , பருத்தித்துறையில் இருந்து கேவில் நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது. நாகர் கோவில் பகுதியில் பேருந்து மீண்டும் பழுதடைந்து வீதியில் நின்றது.

பேருந்தின் பழுதினை சீர் செய்வதற்கு நீண்ட நேரம் சென்றமையால் , இரவு வேளையில் பயணிகள் வீதியில் பல இன்னல்களுடன் காத்திருந்தனர். பின்னர் பேருந்து சீர் செய்யப்பட்டு கேவில் நோக்கி தனது பயணத்தை தொடர்ந்து.

பருத்தித்துறையில் இருந்து கேவில் வரையிலான பேருந்து சேவையினை நம்பி மணல்காடு , நாகர்கோவில் , குடத்தனை , குடாரப்பு, செம்பியன்பற்று, மருதங்கேணி , வெற்றிலைக்கேணி , உடுத்துறை, ஆழியவளை என பல கிராம மக்கள் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனால் இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை ஊடாக தரமான பேருந்து சேவையினை நடாத்துமாறும் , பேருந்து சேவையின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர்.

அது தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களிலும் கோரிக்கைகளை முன் வைத்த போதிலும் தமக்கான தரமான பேருந்து சேவைகள் கிடைக்கப்பெறவில்லை என மக்கள் கவலை தெரிவித்தனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.