இலங்கை நிலப்பரப்பில் ஏற்படும் விரிசல் – மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டில் நிலவிய மோசமான வானிலை தணிந்திருந்தாலும், மலையகம் உட்பட சில பகுதிகளில் நிலச்சரிவுகள், மண் சரிவுகள் மற்றும் தரையில் விரிசல்கள் இன்னும் பதிவாகி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய சீரற்ற காலநிலையால் மலையகமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சூழலில், கொத்மலையில் உள்ள நயபன மலையைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் விரிசல் பதிவாகியுள்ளன.
இதன் காரணமாக சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பல இடங்களில் விரிசல்
கொத்மலையில் உள்ள நயபன கிராமத்திற்கு செல்லும் வீதியில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன் சுமார் ஒன்றரை அடி ஆழத்திற்கு தாழிறங்கியுள்ளது.
இதன் விளைவாக, நயபன பகுதியில் இருந்து 30 குடும்பங்களைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியத்தில் உள்ளனர். இதேவேளை, கம்பளை-நுவரெலியா பிரதான வீதியில் உள்ள துனுகேவுல பகுதியில் சில இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை
இதேபோல், கம்பளை-புபுரெஸ்ஸ பிரதான வீதியில் உள்ள ராஜதலாவ பகுதியில் கடந்த 28 ஆம் திகதி ஏற்பட்ட பெரிய நிலச்சரிவைத் தொடர்ந்து, மீண்டும் சில இடங்களில் நிலத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற நிலைமைகள் பதிவாகினால், மக்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் நிலச்சரிவு ஆராய்ச்சி பிரிவின் இயக்குநர் காமினி ஜயதிஸ்ஸ தெரிசித்துள்ளார்.
மேலும் கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை இன்னும் நடைமுறையில் உள்ளது.