;
Athirady Tamil News

இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை! டிரம்ப்

0

இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று நார்வே பிரதமருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்பட 8 போர்களை நிறுத்தியதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இருப்பினும், 2025 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வெனிசூலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது. இதனால் டிரம்ப் அதிருப்தி அடைந்த நிலையில், தான் பெற்ற நோபல் பரிசை டிரம்ப்புக்கு வழங்குவதாக மரியா கொரினா அறிவித்தார்.

தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு டிரம்ப்பிடம் தனது நோபல் பரிசை மரியா கொரினா வழங்கினார்.

இந்த நிலையில், நார்வே பிரதமர் ஜோனஸ் கார் ஸ்டோருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிதம் ஒன்றை எழுதியுள்ளர்.

அதில் தெரிவித்திருப்பதாவது:

“உலகளவில் 8 போர்களை நிறுத்தியும் உங்கள் நாடு (நார்வே) எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.

இனிமேல் அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும் என்ற கடமை எனக்கு இல்லை. அது எப்போதும் எனக்கு முதன்மையாகவே இருக்கும், ஆனால், அமெரிக்காவின் நலனுக்கு எது தேவையோ அதைச் செய்வதில் கவனம் செலுத்துவேன்.

கிரீன்லாந்தை ரஷியா மற்றும் சீனாவிடமிருந்து டென்மார்க்கால் பாதுகாக்க முடியாது. அந்த நிலத்துக்கு உரிமை கொண்டாட எழுத்துப்பூர்வ ஆவணங்கள் எதுவும் டென்மார்க்கிடம் இல்லை. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு டென்மார்க்கின் படகு அங்கு கரை சேர்ந்ததை மட்டுமே காரணமாக சொல்கிறார்கள். ஆனால், அமெரிக்க படகுகளும் அங்கு கரை சேர்ந்துள்ளது.

நேட்டோ நிறுவப்பட்டதில் இருந்து அனைவரைவிடவும் நான் அதிகமாக செய்துள்ளேன். தற்போது அமெரிக்காவுக்கு நேட்டோ எதாவது செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. கிரீன்லாந்து மீது முழுமையான கட்டுப்பாடு எங்களுக்கு இருந்தால்தான் உலகம் பாதுகாப்பாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.