;
Athirady Tamil News

கர்ப்பிணிகள் பாராசிடமால் எடுத்துக்கொண்டால்… டிரம்ப் சொன்னது பொய்!

0

கர்ப்பக் காலத்தில் பெண்கள் பாராசிடமால் எடுத்துக் கொள்ளலாம், அது பாதுகாப்பானதுதான் என்றும், அதனால் குழந்தைகளுக்கு ஆட்டிசம், ஏடிஎச்டி, சிசு வளர்ச்சி பாதிப்பு போன்ற எதுவும் நேரிடாது என புதிய மருத்துவ ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டு கர்ப்பிணிகள் பாராசிடமால் மருந்து உட்கொள்வது சரியல்ல என்றும், அது கருவில் இருக்கும் சிசுவுக்கு ஆட்டிசம், ஏடிஎச்டி மற்றும் கரு வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது போன்ற கருத்துகளை தெரிவித்திருந்தார்.

அப்போது, அந்த கருத்துகள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தன. ஆதாரமற்ற இந்த தகவல்களுக்கு, மருத்துவ நிபுணர்கள் தங்களது கண்டனங்களையும் பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில்தான், அமெரிக்க அதிபரின் கூற்று பொய் என்பதை, அண்மைய மருத்துவ ஆய்வு மூலம் தெரிய வந்திருப்பதாக லான்செட் இதழில் வெளியான ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

ஆனாலும், கர்ப்ப காலத்தில் பாராசிடமால் பயன்பாடு குறித்து பல மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

வலி நிவாரணியாகக் கருதப்படும் பாராசிட்டமால் மாத்திரையை – அமெரிக்காவில் அசெட்டமினோஃபென் என்று அழைக்கப்படுகிறது – கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொண்டால், குழந்தைகளுக்கு ஏற்படும் ஆட்டிசத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரது நிர்வாகமும் கூறியபோது உலகெங்கிலும் உள்ள பல மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறையினர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இந்த கருத்து பெண்களிடையே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியதோடு, இது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்ளும் நிலை மருத்துவத் துறைக்கும் ஏற்பட்டது.

அதன்படி, பாராசிடமால் எடுத்துக் கொண்ட கர்ப்பிணிகள் மற்றும் எடுத்துக் கொள்ளாத கர்ப்பிணிகளுக்குப் பிறந்த குழந்தைகளை ஆய்வு செய்ததில், டொனால்ட் டிரம்ப் கூறியதைப் போன்ற எந்த அபாயமும் இருக்கவில்லை என்று கண்டறியப்பட்டது.

மேலும், இந்த குழந்தைகள் அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறிது ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் கூறுகையில், பாராசிடமாலுக்கும் ஆட்சிசம் போன்ற பாதிப்புகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை, இந்த அபாயத்தை பாராசிடமால் அதிகரிக்கும் என்பதற்கான கூற்றுக்கும் அடிப்படை இல்லை என்பதை கண்டறிந்துள்ளோம் என்கிறார்.

இதன் மூலம், பாராசிடமால் கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ள பாதுகாப்பான மருந்துதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவ ஆய்வறிக்கை தெளிவுபடுத்தியிருக்கிறது.

ஒருவேளை, கர்ப்பிணிகளுக்கு காய்ச்சல் வந்து, பாராசிடமால் சாப்பிடாமல், உடல் சூடு அதிகரித்தால், அதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம், சில வேளைகளில் கருக்கலைதல், குறைப்பிரசவம் போன்றவைகூட நேரிடலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.