;
Athirady Tamil News

அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே சீற்றம்

0
தமிழர் தாயகத்தில் தமிழ் கட்சிகளை ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு நிகழ்வுகளை நடத்தும் பொழுது அந்த நிகழ்வுகள் ஜே.வி.பி மற்றும் என்.பி.பி யின் நிகழ்வாகவே காட்டப்படுகிறது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் வடமாகாண அவைத்தலைவருமான  சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே சி.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தைப்பொங்கலையொட்டி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். பல நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். அது அவரது உரிமை. ஆனாலும் கூட வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளூராட்சி சபைகளை கொண்ட இலங்கை தமிழரசு கட்சியையோ ஏனைய தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளையோ காணவில்லை. மேடைகளில் பார்த்தால் அரசாங்கத்தின் பிரதிநிதிகளே இருந்தார்கள்.

எங்களை ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு எங்கள் பிரதிநிதித்துவத்தை கண்டும் காணாமல் விட்டு விட்டு நிகழ்வுகளை நடத்தும் பொழுது அந்த நிகழ்வுகள் அது ஜேவிபி மற்றும் என்பிபியின் நிகழ்வாகவே காட்டப்படுகிறது.

அதை அரசாங்க நிகழ்வாக பார்க்க முடியாது. அரசாங்க நிகழ்வென்றால் எங்களின் பிரதிநிதித்துவமும் இருக்க வேண்டும். கொழும்பில் சந்திக்கக்கூடிய அந்த கட்சியை சார்ந்தவர்களே முன் வரிசையில் இருக்கிறார்கள். மற்றவர்கள் போனாலும் ஓரங்கட்டப்படும் நிலையில் தான் இருக்கிறது. எனக்கும் அந்த அனுபவம் உண்டு.

ஜனாதிபதிக்கு தெரியுமோ தெரியாது ஆனால் எங்களை புறக்கணிக்கும் வகையாகவே இதுவும் காணப்படுகிறது
வரவு செலவுத் திட்ட காலத்தில் இருந்து இலங்கை தமிழ் அரசுக் கட்சி அரசாங்கத்துக்கு நல்லெண்ண சமிக்ஞைகளை காட்டியது.

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பம் வைக்கவில்லை.

ஜனாதிபதிக்கு நன்மதிப்பு இருந்தாலும் வடக்கு மாகாணத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறிப்பாக ஒன்றாக முன் செல்வோம் என்ற செயலுக்கு மாறாகவே காணப்படுகிறது.

வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவராக உள்ள எனக்கு கூட அறிவிப்பதுமில்லை. சொல்வது மில்லை. கடந்த முதலாம் திகதி கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணங்களில் மாகாண சபை அவைத்தலைவர்களே தலைமை தாங்கினார்.

மக்கள் வாக்கு பெற்று வந்தாலும் நிகழ்வுக்கு என்னை அழைப்பதில்லை. அதிகாரிகள் தாங்களாக செய்கிறார்களா மேலிட உத்தரவா என எனக்கு தெரியவில்லை. இது பற்றி நாங்கள் அலட்டிக்கொள்ளவில்லை.

எல்லா நிகழ்வுகளிலும் உள்ளூராட்சி சபை தேர்தலில் வென்ற தரப்புக்களை புறக்கணித்து தேசிய மக்கள் சக்தி சார்பில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட அனைவருக்கும் பொறுப்பை கொடுக்கின்றனர்.

இவ்வாறு செயற்பட்டு கொண்டு ஒன்றாக பயணிப்பது சாத்தியமில்லை. ஜனாதிபதி இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வடக்கு கிழக்கில் எமது பிரதிநிதிகளை ஓரம்கட்டி ஜனநாயக விரோத செயலை செய்வது ஆரோக்கியம் அல்ல.

வடக்கு கிழக்கில் அதிகூடிய முதன்மை கட்சி என்ற வகையில் எமது செயற்பாடுகள் தாக்கம் செலுத்தும்.
நாம் சொல்லும் விடயங்களுக்கு சாதகமான பதில் இல்லை.

காணி விடுவிப்பு, தையிட்டி பிரச்சினை என பல விடயங்களுக்கு இதே நிலையே காணப்படுகிறது.இது எதிர்வரும் காலங்களில் அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதை சொல்கிறேன்.ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டவர்களை உரிய முறையில் ஏற்று செயற்படுங்கள்.

எங்களை நிராகரித்து சில அதிகாரிகள் செயற்படுவது அதிருப்தி அளிக்கிறது. உங்களுக்கு என்ன பிரச்சினை என்பதை வெளிப்படுத்துங்கள்.

பாராளுமன்றத்திலும் சர்வதேச ரீதியிலும் ஊடகங்களுக்கும் செல்வோம். நீங்களும் தமிழர்கள் என்பதை புரிந்து அதிகாரிகள் செயற்பட வேண்டும்.

உள்ளூராட்சி சபைகளில் உள்ள ஒருவரை  அழைத்தீர்களா? இல்லை. எனக்கு அழைப்பு வந்தது. நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் நான் அவமதிக்கப்படுகின்ற பொழுது எவ்வாறு நான் செல்வது? எங்கள் உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படும் போது ஒரு கட்சித் தலைவன் என்ற முறையில் நான் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ள முடியாது.

அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.