வட மாகாணத்தில் முதலிட முதலீட்டாளர்கள் ஆர்வம் – நாம் தயாராக வேண்டும்
;
போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், வடக்கு மாகாணம் மீளக்கட்டியெழுப்பப்படுவதில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. பிரதான வீதிகள் புனரமைக்கப்பட்டிருந்தாலும், கிராமப்புற வீதிகள் மற்றும் தீவகப் பிரதேசங்களுக்கான போக்குவரத்து வசதிகள் மிகவும் பின்தங்கியுள்ளன. கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான நீண்ட பயண நேரம் சுற்றுலாவிகளுக்குச் சவாலாக உள்ளது.
எனினும், இந்தியாவுடனான நேரடி வான் மற்றும் கடல்வழித் தொடர்புகள் சுற்றுலாவிகளின் வருகையை அதிகரிக்கச் செய்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் அதிகரிக்கவுள்ள சுற்றுலாவிகளைக் கருத்தில் கொண்டும், எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாட்டைக் கருத்தில் கொண்டும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
எமது மாகாணத்தின் மூலப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் முடிவுப் பொருட்களாக இங்கேயே விற்பனைக்கு வரும் நிலை மாற்றப்பட வேண்டும். இங்கேயே அவற்றைப் பெறுமதிசேர் பொருட்களாக மாற்றுவதற்குரிய பொறிமுறைகள் அவசியம்.
உலக வங்கியின் புத்துயிர் திட்டத்தின் முதல் கட்டத்தில் யாழ். மாவட்டம் மட்டுமே உள்வாங்கப்பட்டுள்ளது. ஆனால், வடக்கின் ஏனைய நான்கு மாவட்டங்களும் அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளன. எனவே, ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கி எமது பொருளாதார மேம்பாட்டை உறுதிப்படுத்த நாம் விரும்புகின்றோம் என ஆளுநர் தெரிவித்தார்.