வெளிநாட்டிலிருந்து வந்த தொழிலதிபர்கள் இலங்கையில் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக ‘குஷ்’ மற்றும் ‘ஹஷிஷ்’ போதைப்பொருள் தொகுதியினை கடத்தி வர முயன்ற மூன்று பயணிகள் இன்று (25) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய வருகை முனையத்தின் ஊடாக வெளியேற முயன்ற போதே, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தொழிலதிபர் கைது
நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய கட்டிடத் தொழிலாளி மற்றும் தொழிலதிபர், மேலும் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய தொழிலதிபர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து ‘ஸலாம் எயார்’ நிறுவனத்திற்குச் சொந்தமான OV-437 ரக விமானம் மூலம் கட்டுநாயக்கவை வந்தடைந்தனர்.
அவர்கள் கொண்டு வந்த 05 பயணப் பொதிகளைப் பரிசோதித்த போது, சுமார் 13 கோடியே 39 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய 10 பொதிகளில் அடைக்கப்பட்ட 10 கிலோகிராம் 394 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளும், 18 பொதிகளில் அடைக்கப்பட்ட 01 கிலோகிராம் 912 கிராம் ‘ஹஷிஷ்’ போதைப்பொருளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்களும் போதைப்பொருள் தொகுதியும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.