ராஜஸ்தான் சிறையில் பூத்த காதல்: பரோலில் வந்து திருமணம் செய்த ஜோடி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சிறையில் காதலித்த ஜோடி, பரோலில் வெளியே வந்து திருமணம் செய்த நிகழ்வு ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநில சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர் ஹனுமன் பிரசாத். 2017-ல் அல்வார் பகுதியில் பன்வாரிலால் என்பவரை ஹனுமன் கொலை செய்தார். இந்த கொலையை நேரில் பார்த்த 4 குழந்தைகளையும் கொலை செய்தார். இந்த வழக்குகளில் ஹனுமன் பிரசாத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ராஜஸ்தானில் பிரியா சேத் என்ற மாடல் அழகி, 2018-ம் ஆண்டில் சிங் என்பவரை டேட்டிங் செயலி மூலம் மோசடி செய்து பணம் பறித்துள்ளார். மேலும், இதனை வெளியில் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக சிங்கை தனது காதலனுடன் சேர்ந்து பிரியா சேத் கொலை செய்தார். இந்த வழக்கில் பிரியா சேத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சங்கனேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே சிறைப்பறவைகள் ஹனுமன் பிரசாத்தும் பிரியா சேத்தும் 6 மாதங்களுக்கு முன்னர் சந்தித்து, ஒன்றாகப் பழகி வந்துள்ளனர். இந்தப் பழக்கமே, பிற்காலத்தில் காதலாக மலர்ந்துள்ளது. இது சிறை வளாகம், நீதிமன்ற வளாகத்திலும் தொடர்ந்துள்ளது.
இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள சிறை அதிகாரிகளிடம் விருப்பம் தெரிவித்தனர். மேலும் திருமணத்துக்காக பரோல் வேண்டி நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து, அல்வாரில் உள்ள பரோடாமேவில் திரு மணம் செய்து கொள்ள நீதி மன்றம் 15 நாள் பரோல் வழங்கியது.
இந்நிலையில், நேற்று பரோடாமே பகுதியில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஹனுமன் பிரசாத், பிரியா சேத்தின் திருமண நிகழ்வில் அவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.