யாழ். ஊடக அமையத்தின் 11.02.2026 ஆம் திகதிய கடிதத்தின் மூலம் – யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை குறிப்பிட்டு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.
அக் கடிதத்தில் பின்வரும் நடைமுறைகள் தெரிவிக்கப்பட்டது.
01.அமர்வு ஆரம்பமாகுவதற்கு முன்னதாக பத்து நிமிடங்கள் காணொளிகளை பதிவு செய்யவதற்கு அனுமதி.
02.அமர்வு உத்தியோகபூர்வமாக முடிவடைந்த பின்னராக ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் கருத்து மற்றும் ஏனைய தரப்புக்களிற்கான சந்தர்ப்பம் (பொருத்தமாயின் மாவட்ட செயலக வளாகத்தினுள்)
03.ஒருங்கிணைப்புக்குழு அமர்வில் இடையூறுகளை விளைவிக்கத்தக்கதான எந்தவொரு காட்சிப்படுத்தலுமின்றி செய்தி சேகரிப்பதற்கான உரிமை ஊடகவியலாளர்களிற்கு வழங்கப்படுதல்.
04.மாவட்ட செயலக ஊடகப்பிரிவில் பதிவு செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே அமர்வு ஆரம்பமாகுவதற்கு முன்னதாகவும் அமர்வு முடிவுற்ற பின்னரும் காணொளிகளை பதிவு செய்ய அனுமதி
05.அமர்வின் போது குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் மற்றும் காணொளிகளை பதிவு செய்யும் ஊடகத்துறை தொடர்புடையோர் மற்றும் சமூக ஊடக பதிவாளர்கள் வெளியேற்ற நடவடிக்கை எடுத்தல்.
மேற்படி யாழ். ஊடக அமையத்தின் தலைவர் உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (24.02.2026) காலை 11.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இக் கலந்துரையாடலின் பிரதானமாக யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் ஊடகவியாளர்களின் வகிபாகம் தொடர்பாக, மேற்படி தம்மால் பரிந்துரைக்கப்பட்ட ஆலோசனைகளை அரசாங்க அதிபரிடம் ஊடக அமையத்தினரால் வலியுறுத்தி தெரிவிக்கப்பட்டது.
யாழ் ஊடக அமையத்தின் ஆலோசனையினை அரசாங்க அதிபர் வரவேற்றதுடன், எதிர்வரும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலிருந்து இவ் நடைமுறையினை பின்பற்றுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் பதிவு செய்யப்பட்ட அச்சு ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளுதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போது, சில முக்கிய கூட்டங்களில் செய்திகளைச் சேகரிப்பவர்களுக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தின் அடையாள அட்டை தேவைப்பாடுகள் வலியுறுத்தப்படுவதால், நிர்வாக நடைமுறைகளை இலகுபடுவதுவதற்காக,
அடையாள அட்டையின் அவசியத்தைகருத்தில் கொண்டு, தகவல் திணைக்களத்தின் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளாதவர்கள் தமது ஊடக நிறுவனத்தின் சிபார்சுடன், அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்க அதிபர் தெரிவித்ததுடன், அது தொடர்பான விடயங்கள் மாவட்ட ஊடகப் பிரிவினால் அச்சு மற்றும் இலத்திரணியல் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், அரசாங்க தகவல் திணைக்களத்தின் அடையாள அட்டை தொடர்பான விண்ணப்படிவங்களை அரசாங்க தகவல் திணைக்களத்தின் www.dgi.gov.lk அல்லது www.news.lk என்ற இணையதள முகவரியிலும் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், யாழ் ஊடக அமையத்தின்
நிறுவுனர் இ. தயாபரன், தலைவர் கு. செல்வகுமார் அங்கத்தவர்களான வி. கபின், த. வினோஜித், சி. நிதர்சன் மற்றும் யாழ்ப்பாண மாவட்டச் செயலக ஊடகப் பிரிவின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
