;
Athirady Tamil News

சவூதி அரேபியாவில் தண்டனை ; சிவராசா அனோஜனை விடுவிக்க அரசாங்கத்திடம் வலியுறுத்து

0

மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த கவலையுடன் அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையில் ,

மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் சமூக ஒற்றுமை
எந்தவொரு மதத்தையும், அதன் புனித ஆளுமைகளையும், மத நம்பிக்கைகளையும் அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்பதை எமது ஒன்றியம் தெளிவாக ஏற்றுக்கொள்வதுடன் அனைத்து மதங்களும் பரஸ்பர மரியாதை, மனித கண்ணியம், சகிப்புத்தன்மை மற்றும் சமாதானத்தை போதிக்கின்றன என்பதனையும் இங்கு வலியுறுத்துகிறோம்.

எனவே மத வெறுப்பைத் தூண்டும் வகையிலான கருத்துகளுக்கும் செயல்களுக்கும் எமது ஒன்றியம் என்றுமே ஆதரவு வழங்குவதில்லை.

அதேவேளை, குறித்த சம்பவத்தில் சிவராசா அனோஜன் தனது பதிவை குறுகிய நேரத்திலேயே நீக்கி, தனது தவறினை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கோரியிருந்ததாக அறியமுடிகின்றது.

இந்நிலையிலும், அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் மனவேதனையையும் அவர்களது எதிர்கால வாழ்வாதாரப் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்துகிறோம்.

எனவே, இலங்கை அரசாங்கமானது தனது இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக சவூதி அரேபிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி, சிவராசா அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையிலிருந்து விலக்களிக்க கூடிய வகையில் ஆகக்கக்கூடிய நிவாரணம் ஏதேனும் வழங்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அதேவேளை, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் தாம் வசிக்கும் நாடுகளின் சட்டங்கள், கலாசாரங்கள்,பண்பாடுகள்,நம்பிக்கைகள் மற்றும் மத உணர்வுகளுக்கு முழுமையான மதிப்பினைச் செலுத்தி, குறிப்பாக சமூக வலைத்தளங்களை மிகுந்த பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

மேற்படிச் சம்பவம் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் பிரார்த்தனையுமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.