;
Athirady Tamil News

தவணை முறையில் வீடு அமைத்து தருவதாக பாரிய நிதி மோசடி

0

தவணை முறையில் வீடுகளும் காணிகளும் வழங்கப்படும் என பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்து, அவர்களிடமிருந்து பணம் பெற்று பாரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவரை, மிரிஹானை விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவு கைது செய்துள்ளது.

கைதான சந்தேகநபர் 48 வயதுடைய நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவராவார். சந்தேகநபர், சமூக ஊடகங்கள் வழியாக விளம்பரங்களை வெளியிட்டு, வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு, வீடும் காணியும் ஆகியவற்றின் மொத்த பெறுமதியின் 60% தொகையை முன்பணமாக பெற்றுள்ளார்.

எந்தவொரு வீடும் அமைத்துக் கொடுக்கப்படவில்லை
எனினும், அத் தொகையைப் பெற்ற பின்னர் வாக்குறுதியளித்தபடி எந்தவொரு வீடும் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. பின்னர் பணத்தை மீளக் கோரிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகளும் பணமில்லாமல் திரும்பியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக இதுவரை மிரிஹானை விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு 5 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த மோசடிக்கு இலக்கான இன்னும் பல பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும் எதிர்காலத்தில் முறைப்பாடுகள் கிடைக்கக்கூடும் என அப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் நேற்று (28) நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹானை விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.