;
Athirady Tamil News

மாவடிப்பள்ளி அபிவிருத்திக்கான பல முன்மொழிவுகள்: காரைதீவு DCC இல் தீர்மானங்கள்.!

0

மாவடிப்பள்ளி அபிவிருத்திக்கான பல முன்மொழிவுகள்: காரைதீவு DCC இல் தீர்மானங்கள்.!

அலுவலக செய்தியாளர்.

அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை (12) காரைதீவு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா அவர்களின் தலைமையில், காரைதீவு பிரதேச செயலாளர் திரு. அருனன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இக்கூட்டம் இடம்பெற்றது.

கூட்டத்தின்போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களால் மாவடிப்பள்ளி பிரதேசத்தின் அபிவிருத்தியை நோக்கி பல முக்கிய முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.

இதன்படி, மாவடிப்பள்ளி ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்திற்கு (PMCU) நிரந்தரமாக அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சிற்றூழியர்களை நியமித்தல்,
மாவடிப்பள்ளி ஆதம் வீதி – ஆதம் குறுக்கு வீதியை 900 மீற்றர் நீளத்திற்கு கார்பட் வீதியாக அமைத்தல்,
மாவடிப்பள்ளி பிரதான வீதியில் உள்ள அரச காணியில் அரச காரியாலயங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் மூன்று மாடிகள் கொண்ட பல்தேவைக் கட்டடம் அமைத்தல் ஆகியவை முன்மொழியப்பட்டன.

மேலும் மாவடிப்பள்ளியில் I Project மூலம் அமைக்கப்பட்டுள்ள கார்பட் வீதிகளுடன் தொடர்புடைய வடிகாண்களுக்கு மூடி (Cover Slab) அமைப்பதற்கும், மாவடிப்பள்ளி தபாலக வீதியில் 120 மீற்றர் நீளத்திற்கு மூன்று அவத்தை மின் இணைப்பு (Three Phase Line) வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனுடன், பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மாவடிப்பள்ளி KM/KM/அல் அஷ்ரஃப் மகா வித்தியாலய கேட்போர் கூடத்திற்கான நாற்காலிகள் கொள்வனவிற்காக 5 இலட்சம் ரூபாவும், மளிகைக்காடு நூரா பிந்து சாலிஹ் அத்தாயிஸ் பள்ளிவாசல் நிர்மாணத்திற்காக மேலும் 5 இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேற்கண்ட முன்மொழிவுகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்று, தேவையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், காரைதீவு பிரதேச சபை பதில் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.