;
Athirady Tamil News

வறட்சியைத் தாங்கக்கூடிய பயிரினங்களை வடக்கில் அறிமுகப்படுத்த நடவடிக்கை

0
வடமாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலான உயர்மட்டக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
விவசாயத் திணைக்களத்தின் தேசிய பணிப்பாளர் நாயகம் கலாநிதி விக்கிரமாராச்சி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் மற்றும் வடக்கு மாகாண விவசாயத் திணைக்கள அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கலந்துரையாடல் சுமார் 4 மணிநேரம் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் மாகாண விவசாயத்துறையின் தற்போதைய சவால்கள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் கொள்கை ரீதியான தீர்மானங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஆளுநர் நா.வேதநாயகன் ,

‘காலநிலை மாற்றம், ஒழுங்கற்ற மழைவீழ்ச்சி, வெள்ளம் மற்றும் நீண்ட வறட்சி என்பன எமது விவசாயிகளின் பயிர்ச்செய்கை நாட்காட்டியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
அத்துடன் தென்னையில் வெள்ளை ஈ மற்றும் வாழையில் பனாமா போன்ற புதிய நோய்த் தாக்கங்களால் விவசாயிகள் விளைச்சல் இழப்பைச் சந்திக்கின்றனர். இதற்குத் தீர்வாக உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளுடனான ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவத்தை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
 வறட்சியைத் தாங்கக்கூடிய பயிரினங்களை அறிமுகப்படுத்துவதுடன், விவசாயிகளின் பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க விவசாய அமைப்புக்களை வலுவூட்ட வேண்டும்.

அத்துடன், அரச – தனியார் பங்குபற்றலுடன் பெறுமதி சேர் உற்பத்திகள், குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலைகள் மற்றும் விவசாயச் பதனிடும் வலயங்களை உருவாக்க வேண்டும். தேசிய மற்றும் மாகாண விவசாயத் திணைக்களங்களுக்கிடையிலான சிறந்த ஒருங்கிணைப்பின் ஊடாகவே இதனைச் சாத்தியமாக்க முடியும் என ஆளுநர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.