யாழில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில் ; பிரதமர் ஹரிணி
மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தடைகளைத் தாண்டி கல்வியில் முன்னேறி வருவது மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், ஜனாதிபதி நிதியத்தின் உதவிகள் மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு மேலும் வலுசேர்க்கும் எனக் குறிப்பிட்டார்.
வடக்கு மற்றும் கிழக்கில் அதிகளவான மாற்றுத்திறனாளிகள் காணப்படுவது கடந்தகால யுத்தத்தின் முக்கியமான பாதிப்புகளில் ஒன்று எனத் தெரிவித்த அவர், மீண்டும் அவ்வாறான நிலை ஏற்படாத வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமைகளும் சம வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட பிரதமர், அவர்களின் வெற்றிக் கதைகள் ஏனையோருக்கு நம்பிக்கையையும் முன்மாதிரியையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், உண்மையில் உதவி தேவைப்படும் மக்களை அடையாளம் கண்டு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப உதவிகளை வழங்கும் நிறுவனமாக ஜனாதிபதி நிதியத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.