;
Athirady Tamil News

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பகிர்ந்த குண்டுவெடிப்பு வீடியோவால் பரபரப்பு

0

வாஷிங்டன் டி.சி.

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும், ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள், தலைவர்கள், தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது.

இதனை தொடர்ந்து ஈரான் நடத்தி வரும் பதிலடி தாக்குதல்களால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதிக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறினார்.

அதற்கேற்ப இரு நாடுகளிடையே நடந்து வரும் நேரடி மற்றும் மறைமுக பேச்சுவார்த்தைகளின் பலனாகவே ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் ராஜதந்திர முயற்சிகளின் பயனாக இது அமைந்துள்ளது என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடகத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேற்காசியாவில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதலில் ஈடுபட்டு வரும் சூழலில், கூடுதல் படைகளை அந்த பகுதியில் குவித்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால், தரைவழி தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்த தயாராகி இருப்பது தெரிய வருகிறது. இந்த நிலையில், டிரம்ப் பகிர்ந்த குண்டுவெடிப்பு வீடியோ பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஆனால், வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதுடன், மேற்காசியாவில் அமெரிக்காவின் கூடுதல் படைகள் களமிறக்கப்பட்டு உள்ளன என்று வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லெவிட் கூறியது அதனை உறுதிபடுத்தும் வகையில் உள்ளது. எனினும், அதனை பென்டகனே முடிவு செய்யும் என்றும் தரைவழி தாக்குதலுக்கான முடிவை டிரம்ப் தனிப்பட்ட முறையில் எடுத்து விட்டார் என்று அர்த்தமல்ல என்றும் லெவிட் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.