யாழ்ப்பாண மாவட்ட திட்டமிடல் குழுக் கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இன்றைய தினம் (15.05.2026) மு.ப 10.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் , இக் கூட்டமானது இரண்டாவது கூட்டம் எனவும், மத்திய மற்றும் மாகாணங்கள் இணைந்த வகையில் மாதாந்தம் இக் கூட்டத்தினை நடாத்த வேண்டும் எனவும், க்ளீன் ஸ்ரீலங்கா, வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிற்றல் மயமாக்கல் போன்ற அரசாங்க கொள்கைகளை முன்னெடுக்கும் போது சரியான பயனுறுதிவாய்ந்த திட்டங்களைஇனங்காண வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும், இக் கூட்டம் ஆரோக்கியமாக நடைபெற ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும் நல்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கருத்துத் தெரிவிக்கையில்,
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களை வரவேற்றதுடன், வடமாகாண அமைச்சின் செயலாளர்கள், கெளரவ உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், போதனா வைத்தியசாலை பணிப்பாளர் உள்ளிட்டவர்களை வரவேற்று, பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினுடைய 2025.03.02ம் திகதிய சுற்றறிக்கைக்கு அமைவாக, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கூடுவதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்படுகின்ற திட்டங்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக ஆராயும் இரண்டாவது கூட்டமாக இது நடைபெறுவதாகவும் தெரிவித்தார். மேலும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் திட்டங்கள் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டிய தேவைப்பாடு இருப்பதாகவும், அக் கூட்டங்களில் விடயங்களை முழுமையாக ஆராய முடியாத காரணத்தினால் தனியான ஒரு குழு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் ஏனைய திட்டங்கள் தொடர்பாக வீதி, கல்வி சுற்றுலா, சுகாதாரம் தொடர்பாக
ஒவ்வொரு துறை சார்ந்த கூட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டு, கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் நடைபெறும் எனவும் தெரிவித்தார். மேலும், அரசாங்கத்தினுடைய நிதியை சரியான முறையிலும் வினைத்திறனாகவும் பயன்படுத்தி திட்டங்களை தயாரிக்க வேண்டும் எனவும், மாவட்ட மக்களுடைய தேவைப்பாடுகள் மற்றும் மாவட்ட அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் என்பதற்காக இத்தகைய திட்டங்கள் தொடர்பாக ஆராய உள்ளதாகவும், அதற்கு ஒவ்வொருவரும் திட்டங்கள் தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்குவதனூடாக மாவட்ட அபிவிருத்திக்காக ஒன்றிணைந்த வகையில் முன்னோக்கிச் செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் திட்டங்களின் முன்னேற்றங்கள் அத் திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள சவால்களும் அதற்கான தீர்வுகளும் வழங்கப்பட்டதுடன், நெடுந்தீவு மக்களுக்கான கடற்போக்குவரத்து, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை அபிவிருத்தி, விவசாயம், பனை அபிவிருத்தி சபை, பழைய பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மலசலகூடத்தினை இயங்கவைப்பது போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.
மேலும், மாவட்ட மட்டத்தில் சகல நிதி மூலங்களையும் உள்ளடக்கி நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இக் கூட்டத்தில் கலந்து கொண்ட யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான எஸ். கபிலன் அவர்களால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2027 – 2028 ஆண்டுக்களில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களின் முன்மொழிவுகள் முன்வைப்பின் ஊடாக முன்வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் பிரதேச சபைகளின் கெளரவ தவிசாளர்கள், மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாகாண அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
