;
Athirady Tamil News

மத்திய அரசின் மருத்துவ திட்டம்: 1.10 கோடி பேருக்கு சிகிச்சை அளித்து தமிழகம் முதலிடம்

0

புதுடெல்லி,

மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.1.56 லட்சம் கோடிக்கு மேற்பட்ட மதிப்பிலான இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டதில் இருந்து, தகுதியான குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 35 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கையில் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களை பின்னுக்கு தள்ளி, சுகாதார சேவைகளை மக்களிடம் திறம்பட கொண்டு சென்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் 1 கோடியே 10 லட்சத்து 30 ஆயிரம் பேருடன் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்ததாக கர்நாடகம் 1 கோடியே 9 லட்சத்து 30 ஆயிரம் பேருடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தியா முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 10 கோடியே 99 லட்சம் மருத்துவமனை அனுமதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரபிர தேசத்தில் இந்த திட்டத்தில் 6 ஆயிரத்து 217 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டாலும், மொத்தம் 1 கோடி நோயாளி அனுமதிகளுடன் மூன்றாவது இடத்தில்தான் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட பீகார் மாநிலம் 35 லட்சம் நோயாளி அனுமதிகளுடன் 12-வது இடத்தில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பொதுமருத்துவம், கண் சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மற்றும் மகளிர் நோய் சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்ட பிரிவுகளில் அதிகளவில் மக்கள் பயனடைந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.